திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் மேல்முருகம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். விவசாயியான இவருடைய இரண்டாவது மகன் சபரி (9). சபரி, அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறான்.
இந்த நிலையில், பள்ளி புதிய கட்டிடம் அருகில் பாழடைந்த முள் புதர் நிறைந்த பகுதியில் மாணவன் சபரி, கழிப்பிடம் சென்று விட்டு திரும்பும் பொழுது சபரியின் காலில் சாரைப்பாம்பு கடித்துள்ளது . நான்கடி நீளமுள்ள பாம்பு கடித்து விட்டதாக மாணவன் அலறியுள்ளான். உடனடியாக பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள், அவனை மீட்டு திருத்தணி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.
அங்கு அவனுக்கு சிகிச்சை அளித்த பின், மருத்துவர்களின் நேரடி கண்காணிப்பில் அனுமதிக்கப்பட்டுள்ளான். சபரியுடன் அவனது பெற்றோர் வெங்கடேசன் மற்றும் கஸ்தூரி உடன் உள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது, ‘பள்ளி வளாகம் சுத்தமான முறையில் இல்லை. செடி, கொடிகள் முள் புதர் நிறைந்துள்ளது. மேலும், புது பள்ளி வளாக கட்டடத்தின் அருகில் பழைய சமையலறை கட்டிடம் மற்றும் கழிவறை கட்டிடம் உள்ளது. இதன் பகுதியில் மாணவன் கழிவறைக்கு சென்றவன் திரும்பும் பொழுது பாம்பு கடித்துள்ளது. பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் பள்ளியை ஆய்வு செய்யாமல் அலட்சியம் காட்டியதால் மாணவனை பாம்பு கடித்துள்ளது. எங்கள் மகனை பாம்பு கடித்ததற்கு முழு காரணம் அரசு பள்ளியின் நிர்வாக சீர்கேடு. தூய்மையான முறையில் பள்ளி வளாகத்தை வைத்துக் கொள்ளாததே காரணம்’ என்று மாணவனின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் குற்றச்சாட்டுகள் வைத்தனர். மாணவனை பாம்பு கடித்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இதனையடுத்து, உடனடியாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மாணவனை பாம்பு கடித்த காரணத்தினால் ஜே.சி.பி எடுத்து வந்து பள்ளி வளாக பகுதியை தூய்மை பணி மேற்கொள்ள செய்தனர்.