சென்னையை அடுத்துள்ள கோவிலம்பாக்கம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் எஸ்தர் என்கிற மீனா. சின்னத்திரை நடிகையான இவர் டெடி உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை நடிகையாகவும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடரில் நடித்து வருகிறார். இத்தகைய சூழலில் தான் போதைப் பொருள் வைத்திருந்ததாகச் சென்னை ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகத்தில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இவர் கைது செய்யப்பட்டபோது 5 கிராம் மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருள் வைத்திருந்ததாக தனிப்படை போலீசார் தகவல் தெரிவித்திருந்தனர். போதைப் பொருள் வைத்திருந்தது தொடர்பாக இவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், இவர் சின்னத்திரை நடிகைகள் மற்றும் துணை நடிகைகளுக்குப் போதைப்பொருள் சப்ளை செய்தது தெரியவந்தது.
இந்நிலையில் எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகை மீனா ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு 15 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நடிகையிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் பார்ட்டி மற்றும் பப்பிற்கு செல்லும் பொழுது தனக்கு போதைப் பழக்கம் ஏற்பட்டதாகவும், நண்பர்கள் போதைப் பொருட்கள் பயன்படுத்தும் போது அவர்களிடம் போதைப் பொருளைக் கேட்டு வாங்கி தானும் பயன்படுத்திவிட்டு பின்னர் போதை பொருட்கள் சப்ளை செய்தவரின் தகவல்களை கேட்டு பெற்றதாகவும் தெரிவித்துள்ளார். அதன் மூலம் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு போதைப் பொருளை வாங்கி மற்ற நடிகர்களுக்கு விற்று வந்ததும் தெரிய வந்தது. ஐந்தாயிரம் ரூபாய்க்கு மெத்தபெட்டமைன் போதைப் பொருளை வாங்கி 3000 ரூபாய் கூடுதல் விலை வைத்து 8000 ரூபாய்க்கு விற்றதும் தெரியவந்தது. அடுத்த கட்டமாக மீனாவை கஸ்டடியில் எடுத்து போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் இவரிடம் போதைப் பொருட்கள் வாங்கிய நடிகர்கள் பட்டியல் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.