பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பொன்னி, பாக்கியலட்சுமி உள்ளிட்ட பல்வேறு சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் யுவராஜ் நேத்ரன். இவர் சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
'ஸ்ரீ ராகவேந்திரா' படத்தில் சிறு வயது ரஜினியாக இவர் நடித்துள்ளார். அதேபோல் முருகன், ஐயப்பன் உள்ளிட்ட கடவுள்களின் குழந்தை வேடங்களிலும் நடித்திருக்கிறார். கடந்த 25 வருடமாக திரைத்துறையில் இயங்கி வரும் யுவராஜ் நேத்ரன் பல்வேறு தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றுள்ளார். இவருடைய மனைவியும் சீரியலில் பிரபல நடிகையாக உள்ளார்.
சில மாதங்களாகவே அவருக்கு புற்றுநோய் இருப்பது உறுதியாகி அதற்காக அவர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தற்போது யுவராஜ் நேத்ரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவரது மறைவு திரைத்துறை மற்றும் சின்னத்திரை ரசிகர்கள் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.