கடலூர் மாவட்டத்தின் பல்வேறு கிராம பகுதிகளிலிருந்து பல்லாயிரக் கணக்கானோர் நாள்தோறும் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக நகரங்களுக்கு வந்து செல்கின்றனர்.
வீட்டில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை 50 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்வது வழக்கமாகும். ஆனால், தற்போது கரோனா வைரஸ் பேரிடர் காலமென்பதால் தமிழக அரசு 'விநாயகர் சதுர்த்தியை அவரவர் வீட்டிலேயே வழிபடுங்கள்' என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் விநாயகர் சிலைகள் செய்யக்கூடிய சிறு, குறு வியாபரிகள் விற்பனை இல்லாததால் மனம் நொந்து உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘பொதுமக்கள் வராததால் குட்டி குட்டி விநாயகர் சிலைகள் ஏராளமாக விற்பனைக்காக வைத்திருந்தும் விற்பனை அவ்வளவாக இல்லை. அதிக முதல் போட்டு வாங்கிய சிலைகள் தேங்கியுள்ளன. இதனால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விநாயகர் சிலை விற்பனையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பல்வேறு பகுதியில் இருந்து விநாயகர் சிலைகளை விலை கொடுத்து வாங்கி வந்த வியாபாரிகள் விற்பனைக் குறைவால், சிலைகள் விற்கப்படாமல் வெறும் காட்சிப் பொருளாக உள்ளதை எண்ணி மனவேதனை அடைவது மட்டுமல்லாமல், தங்களின் வாழ்வாதாரத்தை காத்திட தமிழக அரசு உதவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர்.
இதனிடையே விருத்தாசலத்தில் இஸ்லாமியர் ஒருவர் விநாயகர் சிலைகளை விற்பனை செய்வது பலரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியுள்ளது. அவரது இந்தச் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குவதாகவும் பலரும் பாராட்டி வருகின்றனர்.