புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சட்டப்பேரவை வளாகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், "கர்நாடக மாநிலத்தில் பாஜகவிற்கு பெரும்பான்மை இல்லாமல் பணம் மற்றும் அதிகார பலத்தால் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதள சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சிக்கு வரலாம் என்று நினைத்தார்கள். ஆனால் அவர்களுடைய முயற்சி தவிடு பொடியாகிவிட்டது.
இரண்டு நாட்கள் முதலமைச்சராக இருந்த எடியூரப்பா மற்றும் ஜனார்த்தன ரெட்டி ஆகியோர் சேர்ந்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க நினைத்த ஆடியோ வெளியானது. ஆனால் அவர்களுடைய முயற்சி எடுபடவில்லை. இதன் மூலம் பாரதிய ஜனதாவிற்கு சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது.
இனி வரும் காலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தொல்லை கொடுப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும். அதிகாரங்கள் இல்லாத ஆளுநர்களை கொண்டு மாநிலங்களில் ஆட்சி செய்யலாம் என்று நினைத்த பாஜகவின் முயற்சிகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறி செயல்பட்ட கர்நாடக மாநில ஆளுநர் அம்மாநில மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், அதற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்" என்று கூறினார்.
இறுதியாக, "78 இடங்களை பெற்ற காங்கிரஸ் 38 இடங்களை பெற்ற ம.ஜ.தளத்திற்கு முதல்வர் பதவி விட்டுக்கொடுத்துள்ளதே....?" என்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியதற்கு, " அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா" என முதல்வர் நாராயணசாமி நகைச்சுவையாக பதிலளித்தார்.