கடந்தமுறை டெல்லியில் பி.ஜே.பி. இராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்திக்கிறேன் என்று ஓ.பி.எஸ். பத்திரிகையாளர்களிடம் சொல்லிவிட்டு சென்றபோது அவரை சந்திக்காமல் தவிர்த்தது அரசியலில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே போல இன்று மோடியை சந்திக்க சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்றார். பழனிசாமியுடன் சென்ற தம்பிதுரை இந்த சந்திப்பில் தவிர்க்கப்பட்டது அவருக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓபிஎஸ். திடீரென தர்மயுத்தம் தொடங்கியதால் எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார். அந்த சமயத்தில் சசிகலா தன்னை முதல்வராக்கவில்லை என்கிற வருத்தத்தில் இருந்தவர் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை. இது தொடர்பாக சசிகலாவை சிறையில் சந்தித்தபோது தம்பிதுரை ஆதங்கப்பட்டார் என பரபரப்பாக தகவல் வெளியானது.
அதன்பின் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட தினகரன், அமமுகவை தொடங்கி தனியாக செயல்பட ஆரம்பித்தார். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு டெல்லி விவகாரங்களை கவனிக்கும் வேலைகளை தம்பிதுரை செய்து வந்தார். கடந்த சில மாதங்களாக எடப்பாடி தரப்பு தகவல்களை அவ்வப்போது மத்திய அமைச்சர்களை சந்தித்து தெரிவிக்கும் தபால் வேலையை தம்பிதுரை செய்து வந்தார். கடந்த முறை வரை எடப்பாடி டெல்லியில் வந்தபோது தம்பிதுரை தான் உடனிருந்து பணிகளை கவனித்தார்.
இந்நிலையில் நேற்று அமைச்சர் ஜெயக்குமாருடன் டெல்லி சென்ற எடப்பாடி காலையில் தமிழக எம்பிக்களை சந்தித்து பேசினார். பின்னர் பிரதமரை சந்திக்க புறப்பட்டார். அப்போது முதல்வருடன் ஜெயக்குமார் காரில் ஏறிக்கொள்ள தம்பித்துரை தமிழ்நாடு இல்லத்தில் தங்கி விட்டார்.
பிரதமர் சந்திப்பில் அவர் கலந்து கொள்ளவில்லை. திடீரென தம்பிதுரை ஓரங்கட்டப்பட்டது ஏன் என டெல்லி தரப்பில் கேட்டபோது, சமீபகாலமாக பாஜக தலைவர்கள் தனக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என தம்பித்துரை அக்கட்சியின் மீது கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
இதுதொடர்பான தகவலை பாஜக தலைமையகத்திற்கு உளவுத்துறை அளித்தது. எனவே முதல்வர் பழனிசாமி தம்பிதுரையை அழைத்து வரக்கூடாது என பாஜக கண்டிப்பாக கூறிவிட்டதாக தெரிகிறது. இதனால் தம்பிதுரையை கண்டு கொள்ளாமல் எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்தித்தார்.
திடீரென அதிமுக தலைமை தன்னை புறக்கணித்ததால் இன்று காலையில் இருந்து மூட் அவுட் ஆகியிருந்த தம்பிதுரை யாரிடமும் பேசவில்லை என்கின்றனர் டெல்லி அதிமுகவினர். மோடியை பார்த்து விட்டு வந்த எடப்பாடி பத்திரிகையார்கள் பேட்டியின்போது தம்பிதுரையை அழைத்து தன்னுடன் நிறுத்திக்கொண்டார். வேறு வழியின்றி கோபத்தை காட்ட முடியாமல் வலுக்கட்டாயமாக சிரிப்பை வரவழைத்துக்கொண்டு நின்றார்.
கடந்த முறை ஓ.பி.எஸ், இந்த முறை தம்பிதுரை என தொடர்ச்சியாக பாஜக தலைவர்கள் அ.தி.மு.க. முக்கிய புள்ளிகளை தவிர்த்து வருவது அ.தி.மு.க. வட்டாரங்களில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.