விருதுநகர் மாவட்டம் நென்மேனி பகுதியில் கத்தி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்ட வீடியோ காட்சி தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்துள்ள வன்னிமடை பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் நென்மேனி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று தன்னுடைய வேலை முடித்துக் கொண்டு மாரிமுத்து இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் மற்றும் அவர்களது உறவினர்கள் மீது மாரிமுத்துவின் வாகனத்தின் கண்ணாடி மோதியதாகக் கூறப்படுகிறது. இதனால் பாலமுருகனுக்கும் மாரிமுத்துவிற்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் பாலமுருகன் தரப்பால் மாரிமுத்து தாக்கப்பட்டார். காயமடைந்த மாரிமுத்து இது தொடர்பாக அவரது உறவினர்களுக்கு தகவல் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து மாரிமுத்துவின் அப்பா, அண்ணன் ஆகியோர் நென்மேனி பகுதிக்கு கத்தி மற்றும் அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதல் தொடர்பான காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் இரு தரப்பைச் சேர்ந்த 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்து இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.