Skip to main content

தஞ்சை அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருத்த 50 பேர் மீட்பு

Published on 17/05/2019 | Edited on 17/05/2019

செங்கல் சூளைகள் மற்றும் தொழில் கூடங்களில் கொத்தடிமைகள் அதிகம் உள்ளனர். அதேபோல ஆடு மேய்க்கவும் சிறுவர்களை கொத்தடிமையாக வாங்கிச் சென்று வேலை வாங்குகிறார்கள். 

 

news


தஞ்சாவூர் மாவட்டம் கொள்ளிடம் கரையோரம் உள்ள தேவன்குடியில் சேகர் என்பவரின் செங்கல்சூளையில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 24 பேரும், ராஜூ என்பவரின் செங்கல் சூளையில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 18 பேரும், மணி என்பவரின் செங்கல் சூளையில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் உள்பட 50 பேர் கொத்தடிமைகளாக பல ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தனர். 
 

இவர்கள் குறித்து இன்டர்நேஷனல் ஜூடியல் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் கும்பகோணம் கோட்டாட்சியர் வீராசாமிக்கு கொடுத்த தகவலின் பேரில் வியாழக்கிழமை காலை தேவன்குடிக்கு சென்ற வருவாய் கோட்டாட்சியர் வீராசாமி, பாபநாசம் வட்டாட்சியர் கண்ணன் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் 50 பேரையும் அதிரடியாக மீட்டனர். 
 

மீட்கப்பட்டவர்கள் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். உரிய விசாரணைக்கு பின்னர் அவர்களை வருவாய்த் துறையினர் அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.


இதுகுறித்து அரியலூர் மாவட்டம் அருங்கால் பாப்பாங்குளத்தைச் சேர்ந்த சுமதி (30), கூறியதாவது: செங்கல்சூளையில் சித்திரவதையைத் தான் அனுபவித்தோம். என் கணவரின் சர்க்கரை நோய்க்கு சிகிச்சைப் பெறக்கூட அனுமதிக்கவில்லை. நாங்கள் வாங்கியது 50 ஆயிரம் ரூபாய் தான். பத்திரத்தில் எவ்வளவு வேண்டுமானாலும் எழுதிக் கொள்வார்கள். என் தம்பி திருமணத்துக்குக்கூட  போக முடியவில்லை. நல்லது கெட்டதுக்கு கூட போக முடியாது. மிரட்டுவார்கள் என்றார். 
 

இதுகுறித்து கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் வீராசாமி கூறியதாவது: செங்கல் சூளையில் ஒரு வருடத்திலிருந்து பதினைந்து வருடம் வேலைப் பார்த்தவர்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் செங்கல் சூளை நடத்துபவர்களிடம் முன்பணமாக பல ஆயிரம் பெற்றுள்ளனர். தஞ்சாவூர் மற்றும் அரியலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். செங்கல் சூளை உரிமையாளர்களிடம் பத்திரம் எழுதி கடன் வாங்கிய யாருக்குமே கடன் அடையவில்லை.  
 

அப்பா வாங்கிய கடனுக்கு மகனும், மருமகளும் வேலைப் பார்த்து வருகின்றனர். செங்கல் உடைஞ்சா காசு கிடையாது. மழை பெய்ஞ்சு செங்கல் கரைஞ்சா காசு கிடையாது. ஒரு கல்லு அறுத்தா 50 காசு தான். வார சம்பளம் ஆயிரம் ரூபாய் தான் என விசாரணையில் தெரியவந்துள்ளது" என்றார்.
 

இதுதொடர்பாக கபிஸ்தலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சேகர், ராஜூ, மணி ஆகியோர் மூவரையும் தேடி வருகிறார்கள்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்