சேலத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட 41 ஆயிரம் கிலோ வெல்லத்தை உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சேலம் மாவட்டத்தில் தயாரிக்கப்படும் வெல்லத்தில் கலப்படம் செய்யப்படுவதாக உணவுப்பாதுகாப்புத் துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை (நவ. 26) அன்று காலை, சேலம் செவ்வாய்ப்பேட்டை மூலைப்பிள்ளையார் கோயில் பகுதியில் உள்ள ஒரு ஏல விற்பனை மையத்திற்கு வாகனங்களில் விற்பனைக்காக வெல்லம் கொண்டு வரப்பட்டது. உணவுப்பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் உணவுப்பாதுகாப்பு அலுவலர்கள் அங்கு விரைந்தனர்.
அந்த ஏல விற்பனை மையத்திற்கு சேலம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருந்து 42 வாகனங்களில் வெல்லம் கொண்டு வரப்பட்டது. அவற்றில் இருந்த வெல்லத்தை ஆய்வு செய்தபோது, 23 வாகனங்களில் இருந்த வெல்லத்தில் கலப்படம் செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த வாகனங்களில் இருந்த வெல்லத்தின் மாதிரிகள் எடுக்கப்பட்டு, உணவுப்பகுப்பாய்வுக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த வாகனங்களில் இருந்த 41 ஆயிரம் கிலோ வெல்லத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து உணவுப்பாதுகாப்புத்துறை சேலம் மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் கூறுகையில், ''வெல்லம் தயாரிக்கும்போது சோடியம் ஹைட்ரோ சல்பைடு, மைதா, சூப்பர் பாஸ்பேட் ஆகியவை சேர்க்கப்படுகிறது. இவை சட்ட விரோதமானது. இவ்வாறு கலப்படம் செய்யப்பட்ட வெல்லத்தை உட்கொள்வது உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும். கலப்பட வெல்லத்தின் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. ஆய்வு முடிவைப் பொருத்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த வெல்லம் விற்பனை மையம் உரிமமின்றி செயல்படுகிறது. இது தொடர்பாக வெல்லம் உற்பத்தியாளர்களிடமும், சங்க நிர்வாகிகளிடமும் தெரிவித்துள்ளோம். ஏல மையத்தில் வெல்லத்தை விற்பனை செய்வோரும், அதை வாங்கி விற்பவர்களும் உணவுப்பாதுகாப்புத்துறையில் உரிமம் பெற்றே செயல்பட வேண்டும். உரிமம் பெறாதவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.