வருமான வரித்துறைக் கிடைத்த வரி ஏய்ப்பு தொடர்பான புகாரின் அடிப்படையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பச்சையப்பாஸ் சில்க்ஸ், செங்கல்வராயன் சில்க்ஸ், எஸ்கேபி நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அதிகாரிகள் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். சென்னை, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய 34 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்த சோதனையில், பணம், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் வருமான வரித்துறை இன்று (10/10/2021) வெளியிட்டிருந்த அறிவிப்பில், "எஸ்.கே.பி. சிட்பண்ட் நிறுவனம் குறுகிய காலத்திலேயே ரூபாய் 400 கோடி சம்பாதித்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். எஸ்.கே.பி. நிறுவனம் கணக்கில் வராத வருவாயாக ரூபாய் 150 கோடி வைத்திருந்ததையும் அதிகாரிகள் கண்டிபிடித்தனர். சோதனையில் கோடிக்கணக்கில் கடன் கொடுத்ததற்கான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. எஸ்.கே.பி. நிறுவனத்தின் பண்ணை வீடுகள், சொகுசு கார்களுக்கான ஆவணங்களும் சோதனையில் சிக்கின.
சோதனையில் ரூபாய் 1.35 கோடி பணம், 7.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பச்சையப்பாஸ், செங்கல்வராயன் சில்க்ஸின் இடங்களில் ரூபாய் 44 லட்சம், 9.5 கிலோ நகைகள் சிக்கின. பச்சையப்பாஸ், செங்கல்வராயன் சில்க்ஸ் கணக்கில் வராத வருவாயாக ரூபாய் 100 கோடி குவித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.