அரசால் செயல்படுத்த முடியாத கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வில்லை என்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார். மீன்வளத்துறை மற்றும் பணியாளர் சீர்திருத்ததுறை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஓய்வூதிய செலவு தொகை ஆண்டுதோறும் பன்மடங்கு அதிகரித்து வந்த நிலையில் வளர்ச்சிப் பணிகளையும் மக்கள் நல பணிகளையும் செயல்படுத்தவே நிதிகள் இல்லாத சூழல் ஏற்பட்டுவிடும் என்பதால் 174 நாடுகளும் இந்தியாவில் மேற்குவங்கம் தவிர மத்திய அரசும் மாநில அரசுகளும் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி உள்ளதாக கூறியுள்ளார். ஆண்டுதோறும் உயர்ந்து வரும் ஓய்வூதிய நிதி சுமையால் ஓய்வூதியம் தொடர்ந்து வழங்க முடியாத நிலை ஏற்படுவதுடன் அரசு ஊழியர்கள் சம்பளம் உள்ளிட்ட நிர்வாக செலவை ஈடுகட்ட முடியாமல் திவாலாகிவிடும் நிலை என வல்லுநர்கள் கருத்து தெரிவித்த நிலையில் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் பல நாடுகளில் செயல்பட்டு வருகிறது எனவும் கூறியுள்ளார்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தினால் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற முடியாது என அவர் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வில்லை என்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று தெரிவித்துள்ளார்.