தொடர் மழையின் காரணமாக ஏறக்குறைய 14 ஆண்டுகளுக்குப் பிறகு கண்மாயில் நீர் நிறைந்து மறுகால் பாய்வதால் பொது மக்கள் ஆனந்த குளியல் போடும் புதிய பிக்னிக் ஸ்பாட் உருவாகியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலுள்ளது 2,160 மீட்டா் நீளமும், 3 மீட்டா் அகலமும் கொண்ட செஞ்சை நாட்டார் கண்மாய். ஏறக்குறைய 300 ஏக்கர் விவசாயம் பயன்பெறும் வகையிலுள்ள இக்கண்மாயானது 2 கழுங்குகளையும், 6 மடைகளையும் கொண்டது. ஒரு கழுங்கிலிருந்து வெளியேறும் தண்ணீர் குடிகாத்தான்பட்டி, அரியக்குடி, உஞ்சனை வழியாகவும், மறு கழுங்கிலிருந்து வெளியேறும் தண்ணீர் தேனாற்று வழியாக அமராவதிபுதுார் சென்று, அங்கிருந்து தொண்டி கடலுக்கும் செல்கிறது.
வறட்சி மற்றும் ஆக்ரமிப்புக் காரணமாக நிறையாமல் இருந்த இக்கண்மாய் தற்பொழுது பெய்துள்ள தொடர் மழை காரணமாக நிரம்பி தண்ணீர் மறுகால் பாய்கின்றது. ஏறக்குறைய 14 ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீர் வெளியேறுவதால் அதனைப் பார்க்க கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். இதில் பலர் அங்கேயே இறங்கி ஆனந்த குளியல் போடுகின்றனர்.
இது குறித்து பேசிய சமூக ஆர்வலர் ஜான்பாலோ, " கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத பேரானந்தம்.! மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இந்த இடத்தை பார்வையிட்டு, காரைக்குடியின் ஒரு சுற்றுலாத்தலமாக அறிவித்து, கண்மாயில் உள்ள கழிவுகளை அகற்றி சரியான பாதை அமைத்து, கழுங்கை ஒழுங்குபடுத்தி, மிகவும் சுத்தமான பகுதியாக மாற்றி, மழை காலங்களில் மக்கள் வந்து பார்வையிட்டு குளித்து செல்ல பாதுகாப்பு வசதிகள் செய்து கொடுத்தால் காரைக்குடி மக்கள் வார இறுதிநாட்களில் குடும்பத்துடன் வந்து கண்டுகளிக்க ஏதுவாக இருக்கும்." என்கிறார்.