முதல்வரின் சிறப்பு குறைதீர் கூட்டத்திற்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகளை சிறைப்பிடித்து எழுச்சிப் போராட்டத்தினை நடத்தியுள்ளனர் கிராம பொதுமக்கள்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ளது ஆழி மதுரை. சுமார் 400 குடும்பங்கள் வசிக்கும், இந்த ஊருக்கு நீண்ட நாட்களாக குடிநீர் பிரச்சனை உள்ளது. ஐந்து நாளைக்கு ஒரு முறை காவிரி கூட்டுக் குடி நீர்த்திட்டத்தின் மூலம் விநியோகிக்கப்படும் நீர் தான் இங்கு ஆதாரம். இந்த தண்ணீர் பஞ்சத்தால் இடம் பெயர்ந்தவர்கள் ஏராளம். இது ஒருபுறமிருக்க, மயானப் பாதை, கருப்பண்ணசுவாமி கோயில் பாதை ஆகிய இடங்களை ஒருவர் ஆக்கிரமிப்பு செய்ததால், இவர்களால் அந்தப் பாதையை பயன்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகியது. இதனால், ஆக்கிரமிப்பு செய்த தனியாரை அப்புறப்படுத்த வேண்டுமெனவும், குடிநீர் முறையாக விநியோகிக்க வேண்டுமெனவும் பல வருடங்களாக போராடி வருகின்றனர் இப்பகுதி மக்கள்.
இந்நிலையில், சனிக்கிழமையன்று முதல்வர் சிறப்பு குறைதீர் கூட்டத்தினை நடத்த ஆழிமதுரை ஊராட்சி அலுவலகத்திற்கு மண்டல துணை வட்டாட்சியர் விஜயக்குமார், வருவாய் ஆய்வாளர் பார்த்திபன், கிராம நிர்வாக அலுவலர் சுகன்யா, ஊராட்சி ஒன்றிய ஊழியர் ஆகியோர் வந்தனர். கூட்டம் தொடங்கி பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று வந்த நிலையில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மலைச்சாமி என்பவரின் தலைமையில் வந்த பொதுமக்கள் அதிகாரிகளை அலுவலகத்திலேயே பூட்டி வைத்து , " உங்களால் ஒரு பிரயோசனமும் இல்லை. அப்புறம் எதற்கு நீங்க? வேண்டுமெனில், எங்களது கோரிக்கைளை நிறைவேற்றி விட்டு, அதன் பிறகு மற்ற மனுக்களை வாங்கலாம்" என சிறைப்பிடித்தனர்.
தகவலறிந்து அவ்விடத்திற்கு வந்த தாசில்தார் பாலகுரு சம்பந்தப்பட்டவர்களிடம் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரிகளை மீட்டார். பின்னர் அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக கிராம நிர்வாக அதிகாரியிடம் புகாரை வாங்கி வழக்குப் பதிவு செய்தது இளையான்குடி காவல்துறை. இதனால் இப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.