முரட்டு காளைக்கு 37 கடிவாளங்கள் என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. சித்த மருத்துவர் கு.சிவராமன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உள்ளிட்ட பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
விழாவில் சித்த மருத்துவர் கு.சிவராமன் பேசுகையில், "கரோனா காரணமாக பொதுவெளியில் இயல்பாக நடமாட முடியாத இக்கட்டான காலகட்டத்தில் இருக்கிறோம். சித்த மருத்துவத்தின் மூலமாக கபசுர குடிநீர் என்ற விஷயம் எவ்வளவு வெகுஜன மக்களுக்கு பாதுகாப்பு அளித்தது என்பது உலகம் அறிந்த விஷயம். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் இந்த மேடையில் இருக்கிறார். அதனால் இந்த நூலையொட்டி, சித்த மருத்துவ தளத்தையொட்டி சில விஷயங்களை சொல்லவேண்டும் என நினைக்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் கபசுர குடிநீர் பற்றி 19 ஆய்வு கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டுள்ளன. அந்த 19 கட்டுரைகளில் 3 கட்டுரைகள் பன்னாட்டு விஞ்ஞான தளத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு முறை சித்த மருத்துவம் சார்ந்த சில அறிவியல் கருத்துகளை முன்னெடுத்து சொல்லும்போது, எல்லாம் சரி... ஆதாரப்பூர்வமாக இன்டக்ஸ் தளத்தில் வெளியிடுவது மாதிரியான ஆய்வுகள் இல்லையே என்றுதான் உலகத்தில் உள்ள விஞ்ஞானிகள் கூறினர். சென்னையில் சித்த மருத்துவக் கல்லூரியும், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சியும், ஸ்டான்லி மருத்துவ கல்லூரியும் இணைந்து நவீன அறிவியல் உலகின் உச்ச ஆய்வான ரேண்டமைஸ் க்ளினிக்கில் ட்ரையலை கபசுர குடிநீரில் செய்தனர். அந்த ஆய்வில் கபசுர குடிநீர் வைரஸை கட்டுப்படுத்துகிறது, எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்துகிறது என்பது உறுதிசெய்யப்பட்டு பி.எம்.ஜே இண்டக்ஸ் ஜர்னலில் வெளியிடப்பட்டுள்ளது. இது தமிழகமே, தமிழ்சமூகமே கொண்டாடவேண்டிய ஒரு விஷயம். இது ஒரு தொடக்கம்தான்.
சித்த மருத்துவத்தின் அறிவியலை, அனுபவக்கூறுகளை அறிவியல் உலகிற்கு எடுத்துச்செல்ல வேண்டிய மிகமுக்கியமான இந்த காலகட்டத்தில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் முன்னெடுப்பினால் தமிழ்நாட்டில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமையவுள்ளது. அதற்காக அமைச்சருக்கு சித்த மருத்துவ உலகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். கபசுர குடிநீர் மட்டுமல்ல, இதுவரை அறிவியல் கண்களால் அவிழ்க்கப்படாத சிறுசிறு மூலிகைகளிருந்து பெருமருந்துகள் வரை சித்த மருத்துவத்தில் உள்ளன. வரவிருக்கும் சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தில் இது மாதிரியான சித்த மருத்துவ மருந்துகளையும் சித்த மருத்துவ அறிவியலையும் அறிவியல் கண்களோடு நாங்கள் எடுத்துச் செல்ல இருக்கிறோம். அதற்கான அத்தனை ஆய்வு தளங்களையும் இந்த ஆட்சியில் நீங்கள் அமைத்து தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்" எனப் பேசினார்.