கரோனாவை காரணம் காட்டி கோவில்களை அடைத்துவிட்டுப் படப்பிடிப்புக்கு அனுமதி அளிப்பது ஏன் என்று பாஜகவின் ஹெச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் வார இறுதி நாட்களில் கோவில்கள் அடைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அனைத்து நாட்களிலும் கோயில்களைப் பக்தர்கள் வழிபாட்டிற்குத் திறக்க கோரியும் தமிழக பாஜக சார்பில் போராட்டம் நடைபெறும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார் .அதன்படி பழனியில் பாத விநாயகர் கோவில் முன்பு பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா. சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் அபிராமி ஆகியோர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய ஹெச்.ராஜாவோ, ''இந்தியாவில் 93 கோடி பேர் கரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துவார்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மக்களிடம் குறித்து விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் வழிபாட்டுத் தலங்களுக்கு மட்டும் திமுக அரசு தடை விதிக்கிறது. ஆனால் தியேட்டர்கள், மதுபான கடைகளைத் திறந்து வைப்பதன் மூலம் மக்களின் இறை நம்பிக்கையின் மீது திமுக விளையாடி வருகிறது. வார இறுதி நாட்கள் மட்டுமின்றி அமாவாசை போன்ற முக்கிய நாட்களிலும் கோயில்களுக்குச் செல்ல தடை விதிக்கப்படுகிறது. ராமேஸ்வரம் கடலில் நீராட அனுமதி மறுத்து வருகின்றனர். தனுஷ்கோடியில் பக்தர்களுக்கு அனுமதி மறுத்து விட்டு சினிமா படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள கோவில்களுக்குச் சொந்தமான நகைகளை உருக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும். நகையை உருக்குவது மூலம் கொள்ளையடிப்பதற்கு வழிவகுக்கும். இதன்மூலம் கோயில் சொத்துகள் பறிபோகும்'' என்று கூறினார்.
இதில் பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு கோவிலைத் திறக்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு டி.ஐ.ஜி. விஜயகுமாரி, திண்டுக்கல் எஸ்.பி சீனிவாசன் மற்றும் தேனி எஸ்.பி. பிரவீன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டு இருந்ததால் பழனியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.