திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூருக்கு அடுத்துள்ள தாமரைப்பாக்கம் பகுதிக்கு அருகே அமைந்துள்ளது வெங்கல் ஊராட்சி. இங்குள்ள நெடுஞ்சாலை பகுதியின் ஓரமாகப் பிரியாணி கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இதே பகுதியைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க ராஜ்குமார் திருவள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். மேலும், இவர் தனது குடும்பத்துடன் வெங்கல் ஊராட்சியில் வசித்து வருகிறார்.
இத்தகைய சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கறிஞர் ராஜ்குமார் வெங்கல் நெடுஞ்சாலையில் உள்ள பிரியாணி கடையில் பிரியாணி வாங்கச் சென்றுள்ளார். அங்கு ஒரு பிரியாணி பொட்டலத்தை பார்சல் வாங்கிக்கொண்டு அதைத் தனது வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார். இதற்கிடையில், சுடச் சுட வாங்கி வந்த தந்தூரி பிரியாணியை வீட்டில் உள்ளவர்களிடம் பேசிக்கொண்டே பொறுமையாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென அந்த பிரியாணியில் வித்தியாசமான பொருள் இருப்பதைப் பார்த்ததால் உடனடியாக அலர்ட்டான ராஜ்குமார், அந்த பிரியாணியைச் சாப்பிடாமல் அலசிப் பார்த்துள்ளார். அந்த சமயத்தில், சாப்பிடுவதற்காக வாங்கி வந்த பிரியாணியில் கூல் லிப் எனப்படும் போதை வஸ்து இருந்துள்ளது. ஒருகணம், இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ராம்குமார், என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்துப் போயுள்ளார். மேலும், நடந்த விஷயத்தைத் தனது வீட்டில் உள்ளவர்களிடம் கூறி ஆதங்கம் அடைந்துள்ளார்.
ஒருகட்டத்தில், விரக்தியடைந்த ராஜ்குமார் கூல் லிப் கிடந்த பிரியாணி பொட்டலத்தை எடுத்துக்கொண்டு நேராக அந்த பிரியாணி கடைக்குச் சென்றுள்ளார். பின்னர், அந்த கடையில் இருந்த மேசையில் தான் வாங்கி வந்த பிரியாணி பொட்டலத்தைப் பிரித்துப் போட்டுவிட்டு ஊழியர்களை அழைத்திருக்கிறார். இதனிடையே, என்ன நடந்தது எனப் பதற்றத்துடன் வந்த ஊழியர்களிடம், "என்னது இது... சாப்பிடுற சாப்பாட்டுல ஹான்ஸ் எப்படி வரும். காசு கொடுத்து தானே வாங்குறோம். என்னப்பா இதெல்லாம்" எனக் கோபமாக வாக்குவாதம் செய்தார். ஒருகணம், இதைப் பார்த்து என்ன சொல்வது எனத் தெரியாமல் ஊழியர்கள் அமைதியாக இருந்துள்ளனர்.
இதனால் கோபமடைந்த ராஜ்குமார், "இந்த கடைக்கு யாரு ஓனரு? முதல்ல அவர கூப்பிடுங்க. சாப்பிடுற சாப்பாட்டுல இதெல்லாம் எப்படி வரும்" என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். அதன்பிறகு, அந்த பிரியாணி கடையின் உரிமையாளர் வந்தவுடன் அவரிடம் ராஜ்குமார் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால், அவர்கள் உரிய விளக்கம் அளிக்காமல் ராஜ்குமாரை சமாதானம் செய்யவே முயற்சித்தனர்.
இதையடுத்து, இனி இவர்களிடம் பேசினால் சரிவராது என முடிவு செய்த ராஜ்குமார், இந்த சம்பவம் குறித்து மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையில் டாக்டர் ஜெகதீஸ் சந்திரபோஸிடம் புகார் அளித்தார். அதன்பேரில், அந்த புகாரை எடுத்துக்கொண்ட அதிகாரிகள் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே, வெங்கல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களும் கடைகளில் விற்கப்படும் கூல் லிப் உள்ளிட்ட போதை வஸ்துக்களும் சர்வ சாதாரணமாகக் கிடப்பதாகப் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, இதனை ஒடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் தொடர் கோரிக்கை வைத்து வரும் நிலையில், தற்போது பிரியாணி பொட்டலத்தில் போதை வாஸ்து இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.