2009 டிசம்பர் மாதம் இறுதி நாட்களில் நக்கீரன் முயற்சியால் காப்பாற்றப்பட்ட பழமையான நாவல் மரக் கூட்டங்கள், இன்று வயது முதிர்வால் ஒவ்வொன்றாக பட்டுபோய்க்கொண்டிருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலிருந்து கீரமங்கலம் செல்லும் சாலையில் 10 கி.மீ தூரத்தில் உள்ள கிராமம் ஆவணத்தான்கோட்டை. அந்த ஊரையடுத்து 6 கி.மீ தூரத்தில் சாலையோரத்தில் உள்ளது ‘காயாங்குளம்’. குளத்தின் கரைகள் மட்டுமின்றி குளத்திற்குள்ளும் 50க்கும் மேற்பட்ட நாவல் மரங்கள் நூறாண்டுகளை கடந்தும் கூட்டமாக இருந்தன.
இதில் 2009ஆம் ஆண்டு 37 மரங்கள் உயிரோடு இருந்தது. அந்த மரங்களை வெட்டி பிள்ளையார் கோயில் திருப்பணிக்கு கொடுக்க முடிவெடுத்து ஊராட்சி தீ்ர்மானம் நிறைவேற்றி ஊராட்சி ஒன்றியம் வழியாக வனத்துறைக்கு கோப்புகள் அனுப்பப்பட்டது. இந்நிலையில், அத்தனையும் பட்ட மரங்கள் என்றும் அவற்றை வெட்டலாம் என்றும் அனுமதியளித்து நன்கு வளர்ந்த 37 மரங்களை வெட்ட அனுமதி அளிக்கப்பட்டது. எண்களும் போடப்பட்ட நிலையில்தான் "அந்த மர உயிர்களைக் காப்பாற்றுங்கள்" என்று வனத்துறைக்குள் இருந்து நல்ல உள்ளம் கொண்ட ஒரு வனத்துறை ஊழியர் நம்மிடம் கேட்டுக்கொண்டார்.
அவரது கோரிக்கையோடு காயாங்குளம் சென்று பார்த்த பிறகு, அப்போதைய மாவட்ட ஆட்சியர் ரீட்டா ஹாரீஸ் தாக்கர், அப்போதைய மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் ரகுபதி (தற்போதைய தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர்), அப்போதைய மாநில வனத்துறை அமைச்சர் செல்வராஜ் மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். உயிருள்ள மரங்களை வெட்டமாட்டோம் என்று உறுதியளித்தனர். அதன் பிறகு அந்த நாவல் மரக்கூட்டங்கள் காப்பாற்றப்பட்டன. இந்த தகவல் அறிந்து, நம் கவனத்திற்கு கொண்டு வந்த வனத்துறை ஊழியரும் ஆவணத்தான்கோட்டை கிராமத்தினர் பலரும் நக்கீரனுக்கு நன்றி கூறினார்கள்.
11 ஆண்டுகளுக்கு முன்பு நக்கீரனால் காப்பாற்றப்பட்ட 37 நாவல் மரங்களில் பல மரங்கள் வயது முதிர்வால் பட்டுப்போய் நிற்கிறது. இதனைப் பார்க்கும்போது வேதனையாகவும் உள்ளது. ஆவணத்தான்கோட்டை பகுதி இளைஞர்கள் கூறும்போது, “பள்ளி மாணவர்கள் முதல் இளைப்பாறும் வழிப்போக்கர்கள் வரை பழம் கொடுத்த நாவல் மரங்களை மொத்தமாக அழிக்க நினைத்தபோது அன்று நக்கீரனால் காப்பாற்றப்பட்டதால், இன்று பல மரங்கள் பட்டாலும் ஏராளமான மரங்கள் உயிரோடுதான் நிற்கிறது. இந்த மரங்கள் உயிரோடு நிற்பதால்தான் குளத்தில் பாதிவரை ஆக்கிரமித்தவர்கள் மீதியை ஆக்கிரமிக்க முடியாமல் பாதி குளமும் காப்பாற்றப்பட்டிருக்கிறது” என்றனர்.