பெரும்பாலும் புதிதாகப் பிரியாணி கடைகள் திறக்கும் பொழுது 10 ரூபாய்க்கு ஒரு பிரியாணி அல்லது ஒரு பிரியாணி வாங்கினால் ஒன்று இலவசம் போன்ற நூதன விளம்பரங்களைப் பார்த்திருப்போம். கடை திறக்கும் நாளிலேயே மக்கள் கூட்டம் கடையில் அலைமோத வேண்டும் எனக் கடையின் உரிமையாளர்கள் இந்த நூதன முறைகளைக் கடைப்பிடிக்கின்றனர்.
தற்பொழுதெல்லாம் பிரியாணி கடைகளைத் தாண்டி அனைத்து வர்த்தக நிலையங்களிலும் இதுபோன்ற அதிரடி ஆஃபர் முறைகள் கொண்டு வரப்படுகின்றன. அப்படி ஒரு ஆஃபரைத்தான் கொடுத்துள்ளது துணிக்கடை ஒன்று. பூம்புகாரில் புதிதாகத் திறக்கப்பட்ட 'சி.எஸ் க்ளாஸிக்' என்ற துணிக்கடையில் அறிமுக நாள் சலுகையாக ஒரு ரூபாய்க்கு ஒரு சட்டை என்ற ஆஃபர் வெளியிடப்பட்ட நிலையில், கடை திறந்த நாளே கூட்டமும் அள்ளியது. கூட்டம் சட்டைகளையும் அள்ளியது. ஆனால் நீண்ட நேரம் காத்திருந்த யாரும் தங்களுக்கு வேண்டிய பிடித்த சட்டையைத் தேடி விரும்பி எடுக்கும் நிலை கைகொடுக்கவில்லை. ஒரு ரூபாயை கொடுத்துவிட்டு சூர்ய வம்சம் படத்தில் வருவது போல வரிசையில் நின்று கொடுத்த துணிகளைத்தான் வாங்கிக்கொண்டு நகர முடிந்தது.