உடுமலை சங்கர் கொலை வழக்கில் தண்டனை பெற்ற அனைவரும் தங்களது தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது தொடர்பாக உடுமலை காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை குமரலிங்கத்தைச் சேர்ந்தவர் சங்கர் (22). இவர், பழநியைச் சேர்ந்த கவுசல்யா என்ற பெண்ணை காதலித்து கலப்பு திருமணம் செய்துகொண்டார். இதன் காரணமாக கடந்த 2016 மார்ச் 13-ம் தேதி உடுமலையில் பட்டப்பகலில் சங்கர் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, ஜெகதீசன், பழனி எம்.மணிகண்டன், பி.செல்வக்குமார், தமிழ் என்கிற கலைதமிழ்வாணன், மதன் என்கிற எம்.மைக்கேல் ஆகிய 6 பேருக்கு தூக்கு தண்டனையும், ஸ்டீபன் ராஜுக்கு ஆயுள் தண்டனையும், மணிகண்டனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து கடந்த ஆண்டு டிசம்பர் 12ம் தேதி தீர்ப்பளித்தது.
இந்த வழக்கில் கவுல்சயாவின் தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை, கல்லூரி மாணவர் பிரசன்னகுமார் ஆகிய 3 பேரை விடுதலை செய்தும் தீர்ப்பளித்தது.
இதனைத் தொடர்ந்து மரண தண்டனையை உறுதி செய்ய இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் உடுமலை சங்கர் கொலை வழக்கில் தூக்கு தண்டனையை எதிர்த்து கவுசல்யாவின் தந்தை சின்னசாமி ஜெகதீசன், தன்ராஜ், உள்பட ஆறு பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். மேலும் ஆயுள் தண்டனையை எதிர்த்து ஸ்டீபன்ராஜும், 5 ஆண்டுகள் தண்டனையை எதிர்த்து மணிகண்டனும் மேல்முறையீடு செய்துள்ளனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.டி.செல்வம், சதீஷ் குமார் அமர்வு, உடுமலை காவல்துறை பதில் அளிக்க உத்தரவிட்டனர்.