கடந்த ஜன 08ம் தேதியன்று குமரி மாவட்டம் களியக்காவிளையின் கேரள பார்டர் செக் போஸ்ட் பணியிலிருந்த எஸ்.ஐ.வில்சன் இரவுப் பணியின் போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
தமிழக முழுக்க அதிர்வலையை ஏற்படுத்தி இந்தக் கொலையில் ஈடுபட்ட அப்துல் சமீம் மற்றும் தவுபீக் இரண்டு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இந்த கொலை தொடர்பாக சுமார் 15 பேர்கள் வரையிலான ஸ்லீப்பிங் ஸெல்களும் சிக்கினர். இவர்கள் இந்தக் கும்பலுக்கு அடைக்கலம் கொடுத்ததுடன் பலவகையிலும் உதவியவர்கள்.
பிடிபட்ட தீவிரவாதிகள் கொலைக்குப் பயன்படுத்திய துப்பாக்கி கேரளாவின் எர்ணாகுளம் பேருந்து நிலைய கழிவு ஒடையிலும், கத்தி திருவனந்தபுரம் தம்பானூர் பகுதியிலிருந்தும் மீட்கப்பட்டு சுமார் ஒரு வார போலீஸ் கஸ்டடி விசாரணைக்குப் பின்பு நெல்லையின் பாளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு மேலே இருந்து வந்த தகவலின் அடிப்படையில் அப்துல் சமீம், தவுபீக் இருவரையும் பாளை சிறையிலிருந்து உயர் பாதுகாப்பு பிரிவிலிருக்கும் சேலம் மத்திய சிறைக்கு மாற்றும் பணிகள் நடைபெற்றன. அதன்படி இரண்டு நாட்களுக்கு முன்பு பாளை சிறையிலிருந்த இரண்டு தீவிரவாதிகளையும் சேலம் சிறைக்கு மாற்றம் செய்யும் பொருட்டு கொண்டு செல்லப்பட்டனர். வழியில் இவர்கள் பாதுகாப்பாக மதுரை ஜெயிலில் அடைக்கப்பட்டு பின், நேற்று (18/02/2020) காலை சேலம் சிறைக்கு 11.00 மணியளவில் கொண்டு வரப்பட்டு உயர் பாதுகாப்பு பிரிவுப் பகுதியின் தனித் தனி ஸெல்களில் அடைக்கப்பட்டனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஆங்காங்கே தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மேலும் பாளை சிறையில், ஒருங்கிணைந்த ஸெல்களே இருப்பதால் ஒருவருக்கொருவர் குரூப் சேர்ந்து சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பிருப்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக உயர் பாதுகாப்ப தொகுதியான சேலம் ஜெயிலுக்கு மாற்றப்பட்டதாகப் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.