கோவையில் தனியார் பெண்கள் விடுதியில் பெண்களை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் போலீசாரால் தேடப்பட்டு வந்த விடுதியின் உரிமையாளர் ஜெகநாதன் திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் அருகே சடலமாக மீட்கப்பட்டார். சரண் அடையும் நோக்கத்தில் குற்றத்தில் தங்கியிருந்த போது மர்ம மரணம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
கோவை பீளமேடு சேரன்மாநகர் அருகே உள்ள வி.ஐ.பி. நகரை சேர்ந்தவர் ஜெகநாதன் (48). இவர் கோவை பாலரங்கநாதபுரம் ஜீவா வீதியில் தர்ஷனா என்ற பெயரில் பெண்கள் விடுதி நடத்தி வருகிறார். 4 மாடிகளை கொண்ட இந்த விடுதியில் கல்லூரி மாணவிகள், ஐ.டி. மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் இளம்பெண்கள் என 180 பேர் தங்கி உள்ளனர். இந்த விடுதியில் கோவை தண்ணீர்பந்தலை சேர்ந்த புனிதா (32) என்பவர் வார்டனாக இருக்கிறார்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதி உரிமையாளரின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நடப்பதாகவும், அங்கு சென்று உணவு சாப்பிட்டு விட்டு வரலாம் என்றும் விடுதியில் தங்கி இருந்த 5 மாணவிகளிடம் வார்டன் புனிதா கூறி உள்ளார். அதை நம்பிய அந்த மாணவிகள் புனிதாவுடன் அந்த ஓட்டலுக்கு சென்றனர்.
அங்கு சென்றதும், மாணவிகளுக்கு சாப்பிட தேவையான அனைத்தையும் புனிதா வாங்கிக்கொடுத்தார். சாப்பிட்டு முடித்த பின்னர், மது அருந்துகிறீர்களா? என்று கேட்டு உள்ளார். உடனே மாணவிகள் அந்த பழக்கம் எங்களுக்கு இல்லை, வேண்டாம் என்று கூறி உள்ளனர்.
பின்னர் வாடன் புனிதா நான் சொல்லுவதை கேட்டு விடுதி உரிமையாளர் மற்றும் சிலருடன் உல்லாசமாக இருக்க வேண்டும்’’ என்று கூறி தவறான பாதைக்கு செல்ல மாணவிகளை அழைத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் அந்த ஹோட்டலில் இருந்து வெளியேறினர். இதன் தொடர்ச்சியாக அந்த மாணவிகள் 5 பேரையும் சந்தித்து இந்த சம்பவம் குறித்து வெளியே தெரிவித்தால் கொலை செய்து விடுவதாக புனிதா மிரட்டல் விடுத்துள்ளார்.
இருந்த போதிலும் அங்கு தங்கி இருக்கும் மாணவிகள் தங்கள் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து மாணவிகளின் பெற்றோர் பீளமேடு போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் அந்த விடுதி உரிமையாளர் ஜெகநாதன், வார்டன் புனிதா ஆகியோர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாகிய இருவரையும் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு திருநெல்வேலி ஆலங்குளம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட குற்றாலம் செல்லக்கூடிய பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த நிலையில் போலீஸார் அந்த சடலத்தை மீட்டு விசாரித்ததில் இவர் கோவையில் பெண்கள் விடுதி நடத்தி பாலியல் அத்துமீறல் புகாரில் சிக்கிய ஜெகநாதன் என்பதும் தெரியவந்தது.
இந்த சம்பவத்தை குறித்து கோவை மாநகர போலீசாருக்கு திருநெல்வேலி போலீசார் தகவல் கொடுத்தனர். இதில் ஜெகநாதன் அவமானத்தில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது குடிபோதையில் விழுந்து இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதாஎன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அதேபோல இவருடன் தேடப்பட்டு வரும் மற்றொரு குற்றவாளியான புனிதா எங்கு உள்ளார்? ஜெகனாதனின் மரணத்தில் அவருக்கு ஏதாவது தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து புனிதாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.
சரண் அடையும் நோக்கத்தில் நெல்லை மாவட்டத்திற்கு வந்த ஜெகன்நாதன்
தலைமறைவான ஜெகன்நாதன் நெல்லை மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் சரண் அடையும் நோக்கத்துடன் குற்றாலம் வந்து இரண்டு நாட்கள் தங்கியிரந்தார். அவரது கோவை வழக்கறிஞரின் ஆலோசனையின்படி ஆலங்குளம் ஜெ.எம். கோர்ட்டில் சரண் அடைவதற்கான ஏற்பாடுகளை அங்குள்ளவர்களின் மூலம் ஏற்பாடு செய்தார். அங்கு சரண் அடைவதற்காக நேற்று முன்தினம் ஆலங்குளம் வந்த ஜெகன்நாதனை, அவருடன் தொடர்புடையவர்கள் சுமார் 8 கி.மீ. தள்ளியுள்ள சிவநார்குளம் கிராமத்தில் அருகே உள்ள தென்னந்தோப்பு பம்புசெண்ட் அறை கிணறில் தங்க வைத்திருக்கிறார்கள்.
இன்று சரண் அடைய கூடிய நிலையில் நேற்று மாலை ஜெகன்நாதன், கிணற்று பக்கமாக இருந்து மது அருந்தியிருக்கிறார். போதை ஏறியதும், அவரால் எழுந்து நிற்க முடியவில்லை. அந்த சமயத்தில் வெட்டவெளியில் காற்று பலமாக அடித்ததால் தள்ளாடிய அவர் கிணற்றில் விழுந்திருக்கிறார். இதனை தற்செயலாக பக்கத்து வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவர் பார்த்துள்ளார். பின்னர் ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
இரவு நேரம் என்பதால் தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு அதிகாலை அவரது சடலம் கிணற்றில் இருந்து எடுக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திய ஆலங்குளம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஐயப்பன், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த வழக்கு சந்தேக மரணம் என்று பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
பரமசிவம், அருள்குமார்
படங்கள்: ராம்குமார்