Skip to main content

எழுவர் விடுதலை விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறதா தமிழக அரசு? சீமான் கண்டனம்

Published on 11/01/2019 | Edited on 11/01/2019
Seeman



 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு கால் நூற்றாண்டுக்கு மேலாகச் சிறைக்கொட்டடிக்குள் வாடிக் கொண்டிருக்கும் எழுவரின் விடுதலைக்காகத் தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டு நூறு நாட்களுக்கு மேலாகியும் இன்னும் விடுதலை கிடைக்கப் பெறாத நிலையில் தமிழக அரசு வாய்மூடி மௌனியாகக் கிடக்கிறக் கொடுமை ஒருபுறமிருக்க, தற்போது புழல் சிறையிலுள்ள தம்பிமார்கள் பேரறிவாளன், இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோரைச் சந்திக்கச் சென்ற தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் தம்பி களஞ்சியம் உள்ளிட்டோருக்கு அனுமதி மறுத்திருப்பது எழுவர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியிருக்கிறது. 
 


சிறைவாசிகளின் நேர்காணல் சந்திப்பு என்பது அவர்களுக்குரிய அடிப்படை உரிமை. அதனை சட்டமே அங்கீகரித்து வரையறுக்கிறது. அவ்வுரிமையைக் காரணமின்றி நிராகரிப்பது என்பது சிறைவாசிகளின் உரிமையை மறுக்கும் உரிமை மீறல். அந்தவகையில் புழல் சிறைக்குத் தம்பிமார்களை சந்திக்கச் சென்ற தம்பி களஞ்சியம் உள்ளிட்டோரைப் பல மணிநேரம் காக்க வைத்துத் திருப்பி அனுப்பியிருப்பதன் உள்நோக்கத்தைச் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.
 


தருமபுரி மாணவிகள் எரிப்பு வழக்கில் தண்டனைப் பெற்ற மூவரையும் 13 ஆண்டுகளில் விடுதலை செய்ய ஆளுநரின் ஒப்புதல் பெற அரசியல் நகர்வுகளை முன்னெடுத்தத் தமிழக அரசு, ராஜீவ் காந்தி வழக்கினுள் 28 ஆண்டுகளாக வாடும் எழுவரையும் விடுவிக்க ஆளுநருக்கு அரசியல் அழுத்தங்களைத் தராது அமைதி காப்பது அப்பட்டமான மோசடிச்செயல். மக்களின் பிரதிநிதித்துவம் பெற்ற ஓர் அமைச்சரவையின் தீர்மானத்தை அலட்சியம் செய்து நூறு நாட்களுக்கு மேலாகக் கிடப்பில் போட்டிருக்கிற தமிழக ஆளுநரின் செயலானது சனநாயகத்தையே குழிதோண்டிப் புதைக்கும் கொடுஞ்செயல். இதற்கெதிராக கிளர்ந்தெழுந்து சனநாயகப் பற்றாளர்களும், மாந்தநேய ஆர்வலர்களும், இன உணர்வாளர்களும் எழுவரின் விடுதலைக்காக ஒருமித்துக் குரலெழுப்ப வேண்டியது காலத் தேவையாகும்.
 


ஆகவே, உலகத்தமிழர்களின் நெடுநாள் கனவை நிறைவேற்றும்பொருட்டு அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து எழுவரின் விடுதலைக்கு தமிழக ஆளுநருக்கு உரிய அரசியல் அழுத்தங்களைக் கொடுத்து அவர்களின் விடுதலையை உடனடியாகச் சாத்தியப்படுத்த வேண்டும் எனவும், சிறைவாசிகளின் நேர்காணல் உரிமையை மறுக்கும் அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்