தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் கடலூரில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த சங்கத்தின் மாநில சிறப்புத் தலைவர் பாலசுப்பிரமணியம், செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் சார்பில் கடந்த 10 ஆண்டுகால தமிழக அரசின் அனைத்து துறை பணியாளர்கள் தொடர்பான அணுகுமுறை குறித்த ஆய்வு மாநாடு வரும் 27-ஆம் தேதி சிதம்பரத்தில் நடத்தப்படுகிறது. 2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு இதுவரை அவர்களுக்கான ஓய்வூதிய அறிவிப்பு கிடையாது.
துப்புரவு தூய்மை பணி, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பாதுகாவலர்கள், உள்ளிட்ட சுமார் 2 லட்சம் உடலுழைப்பு அடிப்படை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது. நியாய விலை கடை பணியாளர்களுக்கு நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்களுக்கு நிகரான ஊதியம் உள்ளிட்ட வழங்காமல் மறுக்கப்படுகிறது. டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், கால முறை ஊதியம் கிடையாது. இவை குறித்து மாநாட்டில் விவாதித்து செயல்திட்டங்கள் வகுக்கப்படும்.
விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி 15-ஆம் தேதி மாவட்ட தலைநகரில் அரசுப் பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. அதனைத் தொடர்ந்து 16-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை அரசுப் பணியாளர் சங்கம் மற்றும் இணைக்கப்பட்ட சங்கங்கள் அரசு ஊழியர்கள், பச்சை பேட்ஜ் அணிந்து விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.