தடை செய்யப்பட்ட பட்டாசுகளைத் தயாரிக்கவோ, விற்கவோ, வாங்கவோ கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடிக்கக் கூடாது எனத் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட பசுமை பட்டாசுகளையே மக்கள் வெடிக்க வேண்டும்.ஒலி மாசுகளை ஏற்படுத்தும் சரவெடி உள்ளிட்ட பட்டாசுகளை வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். மருத்துவமனை, பள்ளி, நீதிமன்றம், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம். குடிசைப்பகுதிகளில் எளிதில் தீப்பிடிக்க வாய்ப்புள்ள இடங்களில் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.