
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகில் உள்ள டி.புதுப்பாளையம் கிராமத்தின் அருகில் உள்ளது அன்ராயநல்லூர். இப்பகுதியில் ஆதிநாயுடு அறக்கட்டளைக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை கடந்த பத்தாண்டுகளாக புதுப்பாளையத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகன் முருகன்(37), குத்தகைக்கு எடுத்து பயிர் செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில், குத்தகை முறையாக செலுத்தவில்லை எனக் கூறி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு முருகன் வசம் இருந்த அந்த நிலத்தை, அறக்கட்டளை நிர்வாகத்தினர் சின்னராஜ்(55) என்பவருக்கு மாற்றி கொடுத்துள்ளனர்.
தற்போது அந்த நிலத்தில் சின்னராஜ், சவுக்கு பயிரிட்டுள்ளார். தன்னிடம் இருந்த நிலத்தை சின்னராஜுக்கு குத்தகைக்கு மாற்றி கொடுத்த ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார் முருகன். இந்த நிலையில், நேற்று மாலை 4 மணி அளவில் சின்னராஜ், குத்தகை நிலத்தில் சவுக்கு நடவு செய்திருந்தார். அதை கண்டு கோபமடைந்த முருகன் அந்த சவுக்குக் கன்றுகளை பிடுங்கி எறிந்துள்ளார். அப்போது அவர்களுக்கு வாக்குவாதமாகி முருகன், சின்னராஜை தாக்கியுள்ளார். பயந்துகொண்டு சின்னராஜ் அங்கிருந்து ஓடியுள்ளார்.
திருவெண்ணைநல்லூர் திருக்கோவிலூர் சாலையில் சின்னராஜை துரத்திச் சென்று, அவரது தலையில் கட்டையால் தாக்கியுள்ளார் முருகன். இதில் படுகாயம் அடைந்த சின்னராஜ், மயங்கி விழுந்து இறந்துள்ளார். இதுகுறித்து தகவல் திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து விழுப்புரம் டி.எஸ்.பி. இருதயராஜ், திருவெண்ணைநல்லூர் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கட்டையால் அடித்துக் கொலை செய்த முருகனை கைது செய்யக் கோரி சின்னராஜ் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியலை கைவிட்டனர். இந்த நிலையில் இரவு 7 மணியளவில் திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் முருகன் சரணடைந்துள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.