Skip to main content

யார்தான் ஜாமீன் மனுவை விசாரிப்பது? - செந்தில் பாலாஜி தரப்புக்கு மீண்டும் ஷாக் 

Published on 31/08/2023 | Edited on 31/08/2023

 

 Senthilbalaji's side is shocked by the judge's answer, 'Who will hear the bail plea?'

 

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கும் நிலையில், அவரின் ஜாமீன் மனுவை யார் (எந்த நீதிமன்றம்) விசாரிப்பது என்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

 

ஏற்கனவே சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை பெரிய இரும்புப் பெட்டியில் வைத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. 28 ஆம் தேதி ஆஜரான அவரிடம் அமலாக்கத்துறையால் தாக்கல் செய்யப்பட்ட 3,000 பக்க குற்றப்பத்திரிகையின் நகல் வழங்கப்பட்டது. செந்தில் பாலாஜி தரப்பு ஜாமீன் வேண்டுமென்றால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடலாம் என அறிவுறுத்திய சிறப்பு நீதிமன்றம், முடிய இருந்த அவருக்கான நீதிமன்றக் காவலை செப்.15 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.

 

அதனைத் தொடர்ந்து முதன்மை நீதிமன்றத்தை செந்தில் பாலாஜி தரப்பு ஜாமீனுக்காக நாடியது. அந்த மனுவை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்றம், எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமே ஜாமீன் மனுவை விசாரிக்கும் என அறிவுறுத்தியது. நேற்று மீண்டும் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் அருண், பரணி ஆகியோர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி முன்பு முறையிட்டனர். ஆனால் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவியோ, உயர் நீதிமன்றத்தை அணுகி, இந்த ஜாமீன் மனுவை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா என முடிவெடுக்க வேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவு இல்லாமல் தன்னால் மனுவை விசாரிக்க முடியாது எனத் தெரிவித்துவிட்டார்.

 

 Senthilbalaji's side is shocked by the judge's answer, 'Who will hear the bail plea?'

 

இதனால் இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் முறையிடும் நிலைக்கு செந்தில் பாலாஜி ஆளாக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அமர்வில் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் இன்று தற்பொழுது முறையிட்டனர்.

 

'செந்தில் பாலாஜி மீதான ஆட்கொணர்வு வழக்கில் இருந்து நீதிபதி ஆர். சக்திவேல் ஏற்கனவே விலகி உள்ளார். எனவே இந்த முறையீட்டை எப்படி ஏற்பது?' என செந்தில் பாலாஜி தரப்புக்கு நீதிபதி எம். சுந்தர் கேள்வி எழுப்பினார். 'மாற்று அமர்வு இல்லை என்பதால் தங்களிடம் முறையிட்டுள்ளோம் நீங்கள் நிர்வாக ரீதியாக உத்தரவு பிறப்பித்தால் போதுமானது' என செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ முறையிட்டார். அதனைத் தொடர்ந்து இதுகுறித்து தலைமை நீதிபதிதான் விசாரிக்க வேண்டும். அவரிடம் முறையிடுங்கள் என நீதிபதி எம்.சுந்தர் தெரிவித்தார். ஆனால் நாளை நீதிபதி ஆர். சுரேஷ்குமார் அமர்வில் முறையிட இருப்பதாக செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்