Skip to main content

செந்தில் பாலாஜி வழக்கை ஒத்தி வைத்த நீதிமன்றம்

Published on 22/06/2023 | Edited on 22/06/2023

 

senthil balaji case postponded june 27

 

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று  மீண்டும் விசாரணை நடைபெற்றது.

 

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். அதேசமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு நீதிமன்றத்தின் அனுமதியோடு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.

 

இதற்கு முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் உள்ளதால், அவரை விடுவிக்கக்கோரி அவரது மனைவி மேகலா, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த வாரம் விசாரித்த நீதிமன்றம் செந்தில் பாலாஜி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி வழங்கியது. அதே சமயம் அமைச்சர் நீதிமன்றக் காவலில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டது. அமலாக்கத்துறையினர் தங்கள் மருத்துவக் குழுவினரை கொண்டு பரிசோதனை செய்து கொள்ளவும் அனுமதி வழங்கியது. செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

 

இந்நிலையில் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவிற்கும் மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் தூஷார் மேத்தாவுக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. மருத்துவமனையில் உள்ள நாட்களை காவலில் உள்ள நாட்களாக எடுத்துக்கொள்ளக் கூடாது என அமலாக்கத்துறை சார்பில் தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டது.

 

அப்போது தாங்கள் முதலில் வாதாட வாய்ப்பு தர வேண்டும் என்ற அரசு தலைமை வழக்கறிஞர் தூஷார் மேத்தா வாதத்தை முன்வைத்தார். மனுதாரர் செந்தில் பாலாஜியின் மனைவி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ இதற்கு மறுப்பு தெரிவித்து வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் என்.ஆர்.இளங்கோ வாதங்களை முன்வைக்க அனுமதித்தனர். சட்ட விரோதக் கைதாக இருந்தால் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு ஏற்றது என்று நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளை சுட்டிக்காட்டி என்.ஆர்.இளங்கோ வாதிட்டார். உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நீதிபதிகளிடம் விளக்கினார். அதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டதாக வாதிட்டார். அதற்கு சட்டப்படிதான் அமைச்சர் கைது செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து என்.ஆர்.இளங்கோ வாதிடுகையில், செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் கைது செய்யப்பட்டது குறித்து உரிய காரணம் தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவித்தார். கைதுக்கான காரணம் ஏதும் கூறாமல் ஒருவரை கைது செய்யக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதற்காகவே அரசியலமைப்புச் சட்டத்தில் 15ஏ பிரிவை அம்பேத்கர் சேர்த்திருக்கிறார். செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதற்கான காரணத்தைத் தெரிவித்து இருக்க வேண்டும். அது அடிப்படை உரிமை. நக்கீரன் ஆசிரியர் வழக்கில் சட்டத்தால் உருவாக்கப்பட்ட நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதைச் சுட்டிக்காட்டி வாதிட்டார்.

 

1994 இல் நடிகர் சஞ்சய் தத் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேற்கோள் காட்டினார். மேலும் வழக்கறிஞர் அப்பாஸை என்ஜஏ கைது செய்த வழக்கை மேற்கோள் காட்டினார். அரசியலமைப்புச் சட்டத்தின் 226வது பிரிவின் கீழ் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜூன் 13 ஆம் தேதி இரவு 11 மணிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தாமாக முன்வந்து வாக்குமூலம் அளித்ததாக அமலாக்கத்துறையினர் கூறுகின்றனர். அதற்கு முன்னதாக அன்று காலை 9.30 மணி முதல் இரவு 11 மணி வரை என்ன நடந்தது என்று அமலாக்கத்துறை கூறவில்லை. இது தொடர்பான பதிவுகள் எதுவும் இல்லை என வாதிட்டார்.

 

அப்போது செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டபோது நடந்தது தொடர்பாக வாதிட அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். குற்றவியல் நடைமுறைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதற்கு எந்த காரணியும் இல்லை எனத் தெரிவித்தார். ஒருவரை கைது செய்யும் போது விசாரணை அமைப்புகள் 41ஏ பிரிவை கடைப்பிடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது எனத் தெரிவித்தார். அப்போது ஜாமீன் மனுவுக்கு முன்வைக்கும் வாதங்களை ஆட்கொணர்வு மனுவுக்கு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் முன்வைப்பதாக மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். அதற்கு என்.ஆர்.இளங்கோ, இது ஆட்கொணர்வு வழக்கு என்பதால் தங்கள் தரப்பு வாதத்தை பொறுமையாகக் கேட்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

 

ஆட்கொணர்வு மனு ஜூன் 14 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்ட நீதிபதி அன்று மாலை 5.30 மணிக்கு மருத்துவமனைக்கு சென்று செந்தில் பாலாஜியை பார்வையிட்ட பின்னர் நீதிமன்றக் காவலுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பக் கோரும் மனுவை நிராகரிக்க வேண்டும் என்று அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை நீதிபதி இயந்திரத்தனமாக நிராகரித்துவிட்டார். செந்தில் பாலாஜி திமுகவில் சேர்ந்ததால் பழிவாங்கப்படுகிறார் என வாதத்தை முன்வைத்தார். இந்த வாதத்திற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். அரசு தரப்பு வழக்கறிஞர் வாதத்தை கருத்தில் கொள்வதாக நீதிபதி தெரிவித்தார்.

 

2018 இல் போலீசார் பதிவு செய்த வழக்கின் அடிப்படையிலேயே 2021 இல் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. திமுக அரசில் செந்தில் பாலாஜி அமைச்சரான பிறகே 2021 இல் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. ஆட்கொணர்வு மனுவுக்கு அப்பால் வாதம் செல்வதை அனுமதிக்கவில்லை என்றாலும், முன்பு இந்த வழக்கில் நடந்ததை அறிய விரும்புகிறோம். அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்ற வழக்கு, சட்ட விரோத பணப்பரிவர்த்தனை வழக்கு தொடர்பான விபரங்களையும் அறிய விரும்புகிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனர். சுமார் 2 மணி நேரமாக காரசார விவாதம் நடைபெற்றது. இதையடுத்து பதில் வாதத்திற்கு அவகாசம் அளிக்க அமலாக்கத்துறை வழக்கறிஞர் துஷார் மேத்தா கோரிக்கை வைத்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கை வரும் 27 ஆம் தேதிக்கு (செவ்வாய்க்கிழமை) நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்