அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். அதேசமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு நீதிமன்றத்தின் அனுமதியோடு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது மருத்துவக்குழு கண்காணிப்பில் உள்ளார்.
அதேநேரம் செந்தில் பாலாஜி சட்டவிரோதக் காவலில் இருப்பதாக அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில் நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது.
இதில் நீதிபதி நிஷா பானு, “அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்டவிரோதம். அவர் கைது செய்யப்படும்போது சட்ட விதிகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை. எனவே, அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கலாம்” என தீர்ப்பு வழங்கினார். நீதிபதி பரத சக்கரவர்த்தி செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சையைத் தொடரலாம். மருத்துவர்கள் ஒப்புதல் அளிக்கும் வரையில் காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சையில் இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். சிகிச்சையில் இருக்கும் நாட்களை நீதிமன்றக் காவலில் இருக்கும் நாட்களாகக் கருத முடியாது என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதை தொடர்ந்து இந்த வழக்கை மூன்றாவதாக உயர் நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரிப்பார் என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபூர்வாலா அறிவித்துள்ளார்.