Skip to main content

செனகல் நாட்டில் தவிக்கும் 23 தமிழரை மீட்க உடனடி நடவடிக்கை வேண்டும்! ராமதாஸ்

Published on 30/11/2017 | Edited on 30/11/2017
செனகல் நாட்டில் தவிக்கும் 23 தமிழரை மீட்க உடனடி நடவடிக்கை வேண்டும்! ராமதாஸ்

செனகல் நாட்டில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு 23 பேரையும் உடனடியாக மீட்டு தாயகம் அழைத்து வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள செனகல் நாட்டிற்கு வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள் உணவு, ஊதியம் கிடைக்காமல் அவதிப்பட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது. செனகல் நாட்டு மின்சார நிறுவனத்தால் கிட்டத்தட்ட சிறைவைக்கப்பட்டுள்ள அவர்கள், தங்களை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி அங்குள்ள இந்திய தூதரகத்தில் மனு அளித்தும் மீட்கும் முயற்சி தாமதமாவது வருத்தமளிக்கிறது.

வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை அடுத்த மல்லகுண்டா பகுதியைச் சேர்ந்த 23 பேர் அப்பகுதியைச் சேர்ந்த முகவர் மூலமாக மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலில் சென்டோ நகரில் உள்ள மின்சார  நிறுவனத்திற்கு பணிக்கு சென்றனர். நல்ல ஊதியமும், உணவு, தங்குமிடம் உள்ளிட்ட வசதிகள் இலவசமாகவும் வழங்கப்படும் என்று கூறி அவர்கள் பணிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கடந்த ஆகஸ்ட் மாதம் பணிக்குச் சென்ற அவர்களுக்கு ஒரு மாத ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. அதன்பின் இன்று வரை ஊதியம் வழங்கப்படவில்லை. உணவு உள்ளிட்ட வசதிகளும் செய்து தரப்படவில்லை. 

ஏற்கனவே ஊதியம் வழங்கப்படாததால் கையில் பணம் இல்லாமல் தவிக்கும் அந்த தொழிலாளர்களுக்கு உணவும் வழங்கப்படாததால் பல நாட்களாக பட்டினியில் தவிக்கின்றனர். தங்களுடன் பணியாற்றும் மற்ற தொழிலாளர்கள் எப்போதாவது கொடுக்கும் உணவைக் கொண்டு தான் உயிர்வாழ்ந்து வருகின்றனர். செனகல் நாட்டில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் நரகமாக கழிவதாக அவர்கள் கூறியிருக்கின்றனர். 

கொத்தடிமை போன்ற வாழ்க்கையிலிருந்து மீண்டு தாயகம் திரும்ப நினைத்தால், அவர்கள் பணியாற்றும் நிறுவனம் அதற்கும் ஒப்புகொள்ளவில்லை. தங்களிடம் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று  கட்டாயப் படுத்தும் Compagnie d' Electricite du Senegal (CES)  என்ற நிறுவனத்தின் அதிகாரிகள், தமிழகத்தைச் சேர்ந்த 23 தொழிலாளர்களின் கடவுச்சீட்டுகளையும் பறித்து வைத்துக் கொண்டனர். இதனால் அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பவும் முடியாமல் தவிக்கின்றனர். தங்களை மீட்டு தாயகத்திற்கு அனுப்பி வைக்க உதவும்படி செனகல் நாட்டுக்கான இந்திய தூதரிடம் தொழிலாளர்கள் கடந்த 23-ஆம் தேதி புகார் மனு அளித்தனர். அதைத் தொடர்ந்து அந்த தொழிலாளர்களை மீட்டு, தாயகம் அழைத்து வரும்படி அவர்களின் உறவினர்கள் கடந்த 25&ஆம் தேதி வேலூர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு  அளித்தனர்.



தொழிலாளர்கள் அளித்த மனுவின் அடிப்படையில் செனகல் நாட்டில் உள்ள இந்தியத் தூதரகம் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் நிர்வாகிகளை அழைத்து பேச்சு நடத்தியது. அப்போது தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கத் தயார் என்றும், அதே நேரத்தில் அவர்களை விடுவிக்க முடியாது என்றும் அந்த நிறுவனம் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் அங்கு  கொத்தடிமைகளாக பணியாற்ற விரும்பவில்லை என்று கூறிவிட்டனர். இத்தகைய சூழலில் இச்சிக்கலுக்கு எப்போது தீர்வு ஏற்படும்; 23 தொழிலாளர்களும் எப்போது தாயகம் திரும்புவார்கள் என்பது தெரியவில்லை.

தங்களைச் சார்ந்துள்ளவர்களைக் காப்பாற்ற வேண்டும்; அவர்களுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துத் தர வேண்டும் என்பதற்காகத் தான் குடும்பத்தையும், உறவுகளையும் பிரிந்து 23 தொழிலாளர்களும்  மேற்கு ஆப்பிரிக்காவுக்குச் சென்றனர். ஆனால், அங்கு அவர்களையே காப்பாற்றிக் கொள்ள முடியாத சூழல் நிலவுவது கொடூரமானது ஆகும். மற்றொருபுறம் அவர்களின் நிலைமையை எண்ணி உறவுகள் அனுபவிக்கும் வலியும், வேதனையும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவையாகும். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு ஏதேனும் சிக்கல் என்றால் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடனடி நடவடிக்கை எடுப்பார் என்பதற்கு கடந்த காலங்களில் பல உதாரணங்கள் உள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த 23 தொழிலாளர்களை மீட்கும் விஷயத்தில் செனகல் நாட்டுக்கான இந்திய தூதரகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனாலும், அவர்களை மீட்டு, தாயகம் அனுப்புவதில் ஏற்படும் தாமதம் கவலையளிக்கிறது.

செனகல் நாட்டில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு 23 பேரையும் உடனடியாக மீட்டு தாயகம் அழைத்து வர வேண்டும். அவர்களுக்கு செனகல் நிறுவனம் வழங்க வேண்டிய ஊதிய நிலுவையை மத்திய அரசு உடனடியாக பெற்றுத் தர வேண்டும். அத்துடன் அவர்கள் சொந்தமாக சிறுதொழில் தொடங்க தமிழக அரசு  நிதிஉதவி வழங்க வேண்டும்.

சார்ந்த செய்திகள்