Skip to main content

15 நாட்களுக்குள் கோரிக்கைகளை அனுப்புங்கள்; எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் உத்தரவு 

Published on 23/08/2022 | Edited on 23/08/2022

 

mk.stalin

 

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் மக்களின் கோரிக்கைகளை 15 நாட்களுக்குள் அனுப்புமாறு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதல்வர் முக. ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். 

 

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டம் விரிவுபடுத்துவது குறித்து முதலமைச்சர் கடந்த 7.5.22 அன்று சட்டப்பேரவையில் "இந்த ஆண்டே 1000  கோடி ரூபாய் இந்த திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்தார். அதன் படி தங்கள் பகுதிகளில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள பத்து கோரிக்கைகளை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனுப்பி வைக்க முதலமைச்சர் முக.ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 

 

அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது "உங்களுடைய தொகுதி மக்களின் பல்வேறு தேவைகளை அறிந்து, அவற்றில் மிக முக்கியமானது என்று சட்டமன்ற உறுப்பினராகிய நீங்கள் கருதும் 10 முக்கியத் திட்டங்கள் குறித்த பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் அளிக்கலாம். பட்டியலில் இருக்கக்கூடிய மிக முக்கியமான திட்டங்கள் அடையாளம் காணப்பட்டு, தற்போது நடைமுறையில் உள்ள அரசுத் திட்டங்களின்கீழ் செயல்படுத்த இயலாத திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

 

எடுத்துக்காட்டாக உங்கள் தொகுதிக்குட்பட்ட பகுதியில் நெடுங்காலமாக நிறைவேற்றப்படாமல் உள்ள ,  குடிநீர் மற்றும் நீர் ஆதாரத்தை மேம்படுத்தக் கூடிய உட்கட்டமைப்பு வசதிகள், வேளாண் உற்பத்தியை சந்தைப்படுத்துவதற்குரிய பணிகள், இணைப்புப் பாலங்கள் மற்றும் சாலைகள், மருத்துவ வசதிகள், பள்ளி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ போன்ற புதிய கல்வி நிறுவனங்கள் அல்லது தற்போதுள்ள கல்வி நிறுவனங்களில் தேவைப்படும் உட்கட்டமைப்புப் பணிகள், தொழில் வளர்ச்சியை மேம்படுத்தக் கூடிய வசதிகள், .

 

மின் மயானம், நவீன நூலகம் நகர்ப்புறங்களில் ஒருங்கிணைந்த நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையங்கள், புதிய சுற்றுலாத் தளங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் பணிகள் போன்ற சமூக, பொருளாதார மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக் கூடிய முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை நீங்கள் பரிந்துரைக்கலாம்" என குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த கோரிக்கைகளை 15 தினங்களுக்குள் அனுப்பிவைக்குமாறும்  குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்