நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பெயரை தேர்தல் ஆணையம் பதிவு செய்து அங்கீகரித்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிக்கை வாயிலாக தெரிவித்து இருந்தார். 'திசைகளை எல்லாம் வெல்லப் போவதற்கான முதற்கதவு திறந்திருக்கிறது. தடைகளைத் தகர்த்தெறிந்து, கொடி உயர்த்தி, கொள்கையை தீபம் ஏந்தி தமிழக மக்களுக்கான தலையாய அரசியல் கட்சியாக தமிழ்நாட்டில் வலம் வருவோம்' என விஜய் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
தேர்தல் ஆணையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பெயர் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அடுத்தகட்டமாக நிர்வாகிகளை அறிவிக்க தமிழக வெற்றிக் கழகம் தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதனடிப்படையில் செஞ்சி ராமச்சந்திரனை கட்சியின் அவைத் தலைவராக கொண்டு வர தமிழக வெற்றிக் கழகம் முடிவெடுத்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் சேலம் மாவட்டம் ரெட்டியூரில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, ''அதை உங்களிடம் சொன்னார்களா? அந்த மாதிரி கருத்து எதுவும் இல்லையே. இந்த மாதிரி புரளியைக் கிளப்பி விடுகிறார்கள். அதிமுக என்பது ஒரு கடல். இதில் அவர் மாதிரி கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான பேர் கட்சியில் அங்கம் வகிக்கிறார்கள், உழைக்கிறார்கள். அதிமுக ஒரு வலிமையான இயக்கம். பொன்விழா கண்ட கட்சி. அதனால் வேண்டுமென்றே திட்டமிட்டு புரளியை பரப்புவது கண்டிக்கத்தக்கது'' என்றார்.