சுய உதவிக்குழு பெண்களுக்கு வழங்கப்படும் கடன் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் என சுய உதவிக்குழு பெண்களுக்கு கடன் உதவி வழங்கும் விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் தொகுதியில் இருக்கும் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், கோனூர் டிடி 582 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பாக சுய உதவிக்குழு பெண்களுக்கு கடன் உதவி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கறவை மாடுகள் வாங்க நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி கோனூரில் நடைபெற்றது. விழாவிற்கு கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் காந்திநாதன் தலைமை தாங்கினார். பழனி சட்டமன்ற உறுப்பினரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான ஐ.பி.செந்தில்குமார், ஒன்றிய பெருந்தலைவர் சிவ குருசாமி, ஊராட்சி மன்றத்தலைவர் வெள்ளத்தாய் தங்கப்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மத்திய கூட்டுறவு வங்கியின் முதன்மை வருவாய் அலுவலர் அன்புக்கரசன் வரவேற்று பேசினார். இந்த விழாவில் கலந்து கொண்டு சுய உதவிக்குழு பெண்களுக்கு 1 கோடியே 41 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளையும், மாற்றுத்திறனாளிகளுக்கு கறவை மாடுகள் வாங்க 50 லட்சம் நிதியுதவிகளையும் வழங்கிவிட்டு பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ''தமிழக வரலாற்று சாதனையாக தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு 10ஆ ஆயிரத்து 160 கோடி பயிர்க்கடனாக வழங்கப்பட்டுள்ளது. அதில் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் சுமார் 600 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கியில் புதிதாகச் சேர்ந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுத்து பயிர் கடன் வழங்கப்பட்டதால் அவர்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்பட்டுள்ளது. சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் உதவி வழங்குவதை தொடங்கி வைத்தவர் கலைஞர். அவர் தமிழக முதல்வராக இருந்தபோது உள்ளாட்சித்துறை அமைச்சராக பதவி வகித்த மு.க.ஸ்டாலின் அவர்கள் சுமார் 1 லட்சம் சுயஉதவிக்குழு பெண்களுக்கு கடன் உதவி வழங்கி வரலாற்றுச் சாதனை படைத்தார். அவர் முதல்வரானவுடன் முதல் செயல்படுத்திய திட்டம் சுய உதவிக்குழு பெண்களுக்கு கடன் உதவி வழங்கும் திட்டம். சுய உதவி பெண்களுக்கு வங்கியின் மூலம் கடன் உதவி வழங்கும்போது, எவ்வித கவலையும் படவேண்டியதில்லை. காரணம் வாங்கிய கடனை திரும்ப செலுத்த அயராது உழைப்பவர்கள் மகளிர் சுய உதவிக்குழுவினரே. ஒரு குழுவிற்கு கடன் உதவி வழங்கும்போது அவர்களின் வாழ்வாதாரம் உயர்கிறது. அதனால்தான் தொடர்ந்து தி.மு.க. அரசு ஆட்சிக்கு வரும் போதெல்லாம் சுய உதவிக்குழு பெண்களுக்கு அதிக அளவில் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது.
பத்து வருடங்களுக்கு முன்பு தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் அறிஞர் அண்ணா பொறியியல் கல்லூரி கொண்டு வரப்பட்டது. தற்போது மு.க.ஸ்டாலின் ஆட்சியில் கோரிக்கை கொடுத்தவுடன் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் அரசு கலைக்கல்லூரி தொடங்க ஆணையிட்டுள்ளார். இப்பகுதியில் கல்லூரி அமையும் போது போக்குவரத்து வசதியும் ஏற்படுத்தி கொடுக்கப்படும். முதியவர்களுக்கு நிறுத்திவைக்கப்பட்ட உதவித் தொகை விரைவில் அவர்களுக்கு கிடைக்கும்'' என்று கூறினார்.