Skip to main content

பாலியல் வன்கொடுமைக்கெதிராக போராடிய  அருளை பொய் வழக்குத் தொடுத்துச் சிறைப்படுத்துவதா? – சீமான் கண்டனம் 

Published on 03/05/2019 | Edited on 03/05/2019

 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறியிருப்பதாவது:

’’பெரம்பலூரில் ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் செய்த பாலியல் வன்கொடுமைகளைப் பற்றிப் புகார் அளித்ததற்காகவும், அவற்றை ஊடகத்தின் பார்வைக்குக் கொண்டு சென்றதற்காகவும் நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் அருள் மீது பொய் வழக்குத் தொடுத்துச் சிறைப்படுத்தியிருப்பது வன்மையானக் கண்டனத்திற்குரியது.

 

s

 

பொள்ளாச்சியில் எண்ணற்றப் பெண்களின் வாழ்க்கையைச் சூறையாடிய கோரநிகழ்வு வெளிச்சத்திற்கு வந்து அதற்கான நீதியையே இன்னும் பெறாத சூழ்நிலையில் தற்போது பெரம்பலூரிலும் அதேபோல பாலியல் வன்கொடுமைகள் நிகழ்த்தப்பட்டிருப்பது பெரும் மனவலியைத் தருகிறது. இதுதொடர்பாக தம்பி அருள் காவல்துறைக்குப் புகார் கொடுத்தும், சென்னையில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து விளக்கியும் பாலியல் வன்கொடுமையாளர்கள் மீது இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இதன்மூலம், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஆளுங்கட்சி பிரமுகர்களுக்குச் சாதகமாக தமிழகக் காவல்துறை நடந்து கொள்வது வெளிப்படையாகத் தெரிகிறது. 

 

ஆளுங்கட்சி பிரமுகர்களின் பாலியல் வன்கொடுமைக்கெதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறையிடம் புகார் அளித்தால் புகார்தாரர் மீதே காவல்துறை பொய்வழக்குத் தொடுத்து சிறைப்படுத்துவது வேறு எங்கும் நடந்திராதப் பெருங்கொடுமை. இதுபோன்ற நிலையிருந்தால் மக்களுக்கு அரசாங்கம் மீதும், காவல்துறையின் மீதும் எப்படி நம்பிக்கையிருக்கும்? சட்டப்போராட்டத்தின் மூலம் அநீதிக்கான நீதியினைப் பெற முடியும்? என எவ்வாறு நம்புவார்கள்? என்கிற கேள்விகளுக்கு எவரிடத்தில் பதிலிருக்கிறது?

 

பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளைக் காப்பதற்காக அநீதிக்குத் துணைபோகும் தமிழக அரசின் இச்செயல்கள் மூலம் சனநாயகம் படுகொலை செய்யப்பட்டிருக்கிறது. இவையாவும் வாக்குச் செலுத்தி ஆட்சி அதிகாரத்தில் ஏற்றி வைத்த மக்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகமாகும். இதற்கெதிராகக் கட்சி கடந்து சனநாயக ஆற்றல்களும், முற்போக்குச் சக்திகளும் அணிதிரள வேண்டியது தலையாயக் கடமையாகும்.

 

எனவே, பெரம்பலூர் பாலியல் வன்கொடுமைக்கு மத்தியப் புலனாய்வுத்துறை விசாரணையைப் பரிந்துரைக்க வேண்டுமெனவும், கைதுசெய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் அருள் மீதான வழக்கைத் திரும்பப் பெற்று அவரை விடுதலை செய்ய வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இதனைச் செய்யத் தவறும்பட்சத்தில் மக்களைத் திரட்டி மாபெரும் அறப்போராட்டத்தை மாநிலம் தழுவிய அளவில் முன்னெடுப்போம் என எச்சரிக்கிறேன்.’’

சார்ந்த செய்திகள்