Skip to main content

அதே ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் தீக்குளிப்பு முயற்சி... தொடரும் கந்துவட்டிக் கொடுமை...!!

Published on 14/11/2019 | Edited on 14/11/2019

 

இன்று காலையில், நெல்லை கொக்கிரக்குளத்திலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தற்கொலை கடிதத்துடன் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுக்கு மண்ணெண்ணெய் ஊற்றி, தற்கொலைக்கு முயற்சித்தது ஒரு குடும்பம். எனினும், உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த 2 காவலர்கள் அவர்களை தடுத்து, உடலில் தண்ணீரை ஊற்றி காப்பாற்றி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், நெல்லை மாவட்டம்  முன்னீர்பள்ளம் மேல கருங்குளத்தை சேர்ந்தவர் பெயிண்டர் அருள்தாஸ். மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வரும் இவர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக, தன்னுடைய தொழில் தேவைக்காக தனக்கு சொந்தமான காலி வீடுமனைப் பத்திரத்தை ஈடாக வைத்து குறிச்சி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரிடம் 10 பைசா வட்டியில் ரூ.50 ஆயிரம் கடன் பெற்றிருக்கின்றாராம். இதுவரை ஏறக்குறைய 2 இலட்சத்திற்கு அதிகமாக வட்டி கட்டி வந்த நிலையில், போதிய வருமானமில்லாததால் கடந்த ஆறுமாதங்களாக வட்டியினை செலுத்தவில்லையாம். இந்நிலையில், இன்று அதிகாலை அருள்தாஸ் வீட்டிற்கு வந்த கிருஷ்ணன், " வாங்கிய தொகை 50 ஆயிரத்துடன் இன்னும் வட்டி ஒரு லட்சம் கட்ட வேண்டும்." என வற்புறுத்திய நிலையில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோப்பப்பட்ட கிருஷ்ணன், அருள்தாஸை கட்டையால் அடித்து துன்புறுத்தி, அவரிடமிருந்து செல்போனையும் பறித்து சென்றுவிட்டாராம். இதில் ஏற்பட்ட மன உளைச்சலால் வேறு வழியின்றி, தன்னுடைய நிலையை தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வந்து மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுக்கு மண்ணெண்ணெய் ஊற்றி, தானும் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முடிவெடுத்ததாக தெரிவிக்கின்றார் அருள்தாஸ்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மண்ணெண்ணெய் ஊற்றி தீயால் எரிந்து மாண்ட பிறகுதான் தெரிந்தது கந்துவட்டிக் கொடுமையின் வீரியம். அதுபோல், அதே இடத்தில் இன்று என்ன செய்யப் போகின்றது மாவட்ட நிர்வாகம்...?

 

 

சார்ந்த செய்திகள்