Skip to main content

புரையோடிப்போன சாதியப் புற்றை இடித்துத் தள்ளும் கடப்பாரையாகத்தான் பரியேறும் பெருமாள் திரைப்படத்தைப் பார்க்கிறேன்-சீமான்!!

Published on 02/10/2018 | Edited on 02/10/2018

சென்னை நுங்கம்பாக்கம், போர் பிரேம்ஸ் திரையரங்கில் நடைபெற்ற 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப் பார்த்து இரசித்த பிறகு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது,

 

SEEMAN

 

பல படங்களை "இது படம் அல்ல பாடம்" என்று பொதுவாகச் சொல்வோம் அவற்றையெல்லாம் பொய்யாக்கி உண்மையிலேயே இது தான் "படம் அல்ல பாடம்!" என்று போற்றும் வகையில் திரையில் ஒரு புரட்சி தான் தம்பி மாரி செல்வராஜ் இயக்கி, வெளிவந்துள்ள 'பரியேறும் பெருமாள்' திரைப்படம். தம்பி மாரி செல்வராஜின் அனுபவம், வயது இவற்றையெல்லாம் தாண்டிய ஒரு ஆகச்சிறந்த படைப்பாக வெளிவந்துள்ளது. தான் சொல்லவந்த கருத்தை அழுத்தமாகச் சொல்லவேண்டும் என்றுதான் எல்லோரும் நினைப்போம்; அதற்காகக் காட்சிகளைத் திணிப்பது சத்தமான உரையாடல்களைப் பேசுவது அப்படியெல்லாம் இல்லாமல் அவனுடைய வலியை அனைவருக்கும் கடத்தியிருப்பதால் தான் இது ஆகச்சிறந்த படைப்பு! இப்படத்தைப் பார்க்கின்றபோது ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய 'சிண்ட்லர்ஸ் லிஸ்ட்' (Schindler's List) திரைப்படத்தை அவருடைய யூத இனம் எப்படி அழிக்கப்பட்டது என்பதை உணர்த்துவதற்காக எடுக்கிறார். அப்படத்தைப்பார்த்த ஹிட்லரின் வம்சாவழியினர் எல்லோரும் எங்கள் முன்னோர்கள் இவ்வளவு கொடுமையானவர்களா? என்று எண்ணி திரையரங்கைவிட்டு வெளிவரும்போது வெட்கி தலைகுனிந்தார்கள்; அதேநேரம் பாதிக்கப்பட்ட யூத இனத்தைச் சார்ந்தவர்கள் கண்ணீரோடு கடந்து போனார்கள் அதுமாதிரி பரியேறும் பெருமாள் திரைப்படம், சாதியம் சமூகத்திற்கு எவ்வளவு கொடிய நோய் என்பதை மிகத்தெளிவாக உணர்த்துகிறது, விளக்குகிறது. சாதியக் கொடுமைகளுக்குக் காரணமானவன், அதுமாதிரியான செயல்களில் ஈடுபட்டவன், சாதியச் சிந்தனையுள்ளவன் எல்லோரும் திரையரங்கை விட்டு வெளிவரும்போது தலைகுனிவான்; அதேவேளையில் சாதியக் கொடுமைகளினால் ஏற்பட்ட காயத்தை நீண்டகாலமாகச் சுமந்தவன் மௌனமாகக் கடந்துபோவான்; இவ்விரண்டையும் ஒரே திரைப்படத்திற்குள்ளேயே ஒரு படைப்பாளியால் கடத்துவது என்பது பெரும்சாதனை. 

 

கடந்த ஐம்பது ஆண்டுகளாகச் சாதிய ஒழிப்பிற்காக எத்தனையோ இயக்கங்கள் எத்தனையோ முன்னோர்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் இப்போராட்டம் வள்ளுவப் பெருந்தகையின் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்...' என்பதிலிருந்தே தொடங்குகின்றது. 

 

 ஆனால் யாரும் தான் சுமந்து இருக்கின்ற, அனுபவித்து வருகின்ற வேதனையை இன்னொருவருக்கு முழுமையாகக் கடத்தியதே இல்லை; பலர் பேசியிருக்கிறோம்! எழுதியிருக்கிறோம்! ஆனால் மற்றவர்களை உணர வைத்தோமா? என்பதில் தோற்றிருக்கிறோம் என்பதே உண்மை. அவ்வகையில் இப்படம் இரண்டு மணிநேரத்திலேயே இவ்வளவு பெரிய தாக்கத்தை, வலியை அனைவருக்கும் கடத்திவிடுகின்றது என்பதனால் படைப்பாளியாக என் தம்பி மாரி செல்வராஜுக்கும், இதுபோன்ற கதையைக் கேட்டதும் தயாரிக்கப் பயப்படுபவர்கள், எதற்கு இந்தப் பிரச்சினை? இப்படத்தை எடுத்து எப்படிச் சந்தைப் படுத்துவது? என்று கேள்விகேட்பவர்கள் மத்தியில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தானே தயாரித்து, வெளிக்கொண்டுவந்த தம்பி பா.இரஞ்சித்க்கும் தான் இந்த முழுப்பெருமையும் வெற்றியும் சேரும். 

 

'சாதிய இழிவைத் துடைத்தெறியப் போராடாமல் இருப்பதைவிடச் செத்தொழிவதே மேல்!' - என்கிறார் அண்ணல் அம்பேத்கர். 'சாதிதான் சமூகம் என்றால்; வீசும் காற்று விசமாகட்டும்!' - என்கிறார் நம்முடைய கவிஞர் பழனிபாரதி, அதுபோல இந்தப் புரையோடிப்போன சாதியப் புற்றை இடித்துத் தள்ளும் கடப்பாரையாகத்தான் இத்திரைப்படத்தைப் பார்க்கிறேன். எல்லோரையும் இப்படத்தை. பாருங்கள் என்று நாங்கள் அழைப்பது இரசிகர்கள் என்ற மனநிலையில் அல்ல; இது ஒவ்வொருவரின் கடமை!

 

பரியேறும் பெருமாள் இப்படத்தை நாம் கொண்டாடவேண்டும், பாதுகாக்கவேண்டும். இதை ஒரு பொழுதுப்போக்குப் படம் என்று பாராமல் இப்படத்தைப் பேராவணமாக நான் கருதுகிறேன். ஒரே இன சமூகத்திற்குள் எவன் உயர்ந்தவன்? எவன் தாழ்ந்தவன்? எவனெல்லாம் தன்னைத தவிர மற்றவனையெல்லாம் தாழ்ந்த சாதி என்ற எண்ணம் உள்ளவன் தான் தாழ்ந்த சாதியாக இருக்கமுடியும் என்பதே எதார்த்த உண்மை. இத்திரைப்படத்தின் வாயிலாகத் தம்பி மாரி செல்வராஜின் வலியை நமக்குள் கடத்தியிருக்கிறான் அதை நீங்கள் ஒவ்வொருவரும் பார்த்து உணர்ந்துவிட்டால் இப்படைப்பாளிக்கு மிகப்பெரிய வெற்றிதான். இப்படத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும். 

 

பரியேறும் பெருமாள் திரைப்படத்தை இயக்கியுள்ள தம்பி மாரி செல்வராஜ் மற்றும் அவருடன் ஒத்துழைத்த ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர்கள் உள்ளிட்ட தொழில்நுட்பக்கலைஞர்கள், இத்திரைப்படத்தில் நடித்துள்ள கதிர், ஆனந்தி உள்ளிட்ட எல்லாக் கலைஞர்களுமே அந்தந்த கதைப்பாத்திரத்தோடு ஒன்றிபோய் ஒவ்வொரு நொடியும் நமக்குப் பதற்றத்தைத் தருமளவிற்குத் திரைக்கதை திருப்பங்களோடு மிகச்சிறப்பாக இப்படம் வெளிவந்திருக்கிறது என்பதை உளமார பாராட்டுகிறேன். தம்பி மாரி செல்வராஜையும் மற்றும் தம்பி பா.இரஞ்சித்தையும் நினைத்துப் பெருமைப்படுகிறேன் அதேநேரம் பொறாமையும்படுகிறேன். ஏனெனில் இப்படி ஒரு படைப்பை எந்தக் கலைஞன் பார்த்தாலும் நாம் படைக்கவில்லையே என்று நினைப்பான் அந்த அளவிற்கு ஒரு சிறந்த படைப்பாக வெளிவந்துள்ளது. ஆகச்சிறந்த படைப்பைத் தந்த இருவருக்கும் மீண்டும் ஒருமுறை உளப்பூர்வமான பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

 

இதுபோன்ற வலுவான கதைகளுக்குத் தயாரிப்பாளர்களோ, திரையரங்குகளோ கிடைப்பதில்லை என்பது ஒரு சாபக்கேடு! ஐயா சோ அவர்கள் கூட ஒருமுறை சொல்லியிருந்தார், சிறந்த படைப்பாளிக்கு நல்ல தயாரிப்பாளர் கிடைப்பதில்லை; நல்ல தயாரிப்பாளருக்கு சிறந்த படைப்பாளி கிடைப்பதில்லை என்று இது ஒரு முரண்; இது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இங்குப் பா.இரஞ்சித் போன்றவர்கள் தயாரிப்பாளராக இல்லையென்றால் பரியேறும் பெருமாள் போன்ற படங்கள் வெளிவராது; தம்பி விஜய் சேதுபதி போன்றவர்கள் இல்லையென்றால் மேற்குத்தொடர்ச்சிமலை போன்ற படங்கள் வராது; ஏனென்றால் உலகமே வர்த்தகமயமாகிப் போய்விட்டது, நம் நாடே ஒரு சந்தையாக மாறிவிட்டது; அதிலும் திரைத்துறை ஒரு மாபெரும் சந்தையாக இருக்கிறது. அந்தச் சந்தையில் கலை, படைப்பு நோக்கம் என்பதெல்லாம் இல்லை; இங்குப் பொழுதைப்போக்குவதற்குத் தான் இடமிருக்கின்றது; நல்ல பொழுதை ஆக்குவதற்கான இடமாக இது இல்லை; தற்போது தான் இந்நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டேயிருக்கிறது. காக்கா முட்டை, கோபிநயினாரின் அறம், தம்பி செழியனின் டூலேட்(To-Let), இராஜு முருகனின் ஜோக்கர், மேற்குத்தொடர்ச்சிமலை அவ்வகையில் இப்போது பரியேறும் பெருமாள் இப்படிச் சில அபூர்வமான படைபாளிகள் வந்துகொண்டுதானிருக்கிறார்கள்; அவர்களை வீழ்த்தாமல் வாழ்த்தி முன்நகர்த்தி விடவேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது என கூறினார்.

சார்ந்த செய்திகள்