வேலூர் மாவட்டத்திலிருந்து பிரித்து 2019- ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது இராணிப்பேட்டை மாவட்டம். இந்த மாவட்டத்தின் முதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மயில்வாகனம் நியமிக்கப்பட்டார். சரியாக ஓராண்டுக் காலம் பணியாற்றினார். 2021- ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு மயில்வாகனம் மாற்றப்பட்டு சிவக்குமார் நியமிக்கப்பட்டார்.
தேர்தல் முடிவுகள் வந்தது, புதியதாக ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் அதிகாரிகளை இடமாற்றம் செய்தனர். அப்போது காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்தபோது இராணிப்பேட்டை எஸ்.பி.யாக இருந்த சிவக்குமார் மாற்றப்பட்டு புதிய எஸ்.பி.யாக மீனா நியமிக்கப்பட்டார். அவரும் சில வாரங்களில் மாற்றப்பட்டு தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த தேஷ்முக் சேகர் சஞ்ஜய் நியமிக்கப்பட்டார்.
இவர் நியமிக்கப்பட்டு முழுவதாக இரண்டு வாரங்கள் கூட முடியவில்லை. அதாவது ஆகஸ்ட் 2- ஆம் தேதி தான் பதவியேற்றார். தற்போது இவர் மாற்றப்பட்டது ஆச்சரியத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 16- ஆம் தேதி ஏழு காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் ஒருவர். தேஷ்முக் சேகர் சஞ்ஜய், காவல்துறை சிறப்பு அதிரடிப்படையின் 6- வது பட்டாலியன் (மதுரை) க்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய ராணிப்பேட்டை எஸ்.பி.யாக தீபாசத்யன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இரயில்வே துறையின் கண்காணிப்பாளராகச் சென்னையில் பணியாற்றி வந்தவர்.
பொதுவாக உயர் அதிகாரிகள் இடமாற்றம் என்பது இரண்டு ஆண்டுகள் அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். அரசு விதிப்படி ஒரு அரசு அதிகாரி மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரு இடத்தில் பணியாற்றக் கூடாது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது அமைச்சரவை மாற்றம், உயர் அதிகாரிகள் மாற்றம் என்பது அடிக்கடி நடக்கும், எப்போது நடக்கும், எதனால் நடக்கிறது என யூகிக்கவே முடியாது.
அதேபோல் இப்போதும் நடக்கிறதா என்கிற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது. ஒருமாவட்டத்தின் எஸ்.பி.யாக பொறுப்பேற்று இரண்டு வாரங்கள் கூட முடியாத நிலையில் அவரை மாற்றியது ஏன், ஆட்சியாளர்களுடன் மோதலா? அதிகாரிகளுடன் மோதலா? அல்லது விரும்பிய வேறு பதவி வாங்கிச்செல்கிறாறா என்கிற பட்டிமன்றம் மக்களிடம் நடக்கிறது.
அவர் மாற்றலுக்கான உண்மையான காரணம், "தஞ்சாவூரில் எஸ்.பி.யாக இருந்தபோது, ஹெலிகாப்டர் சகோதரர்கள் என அழைக்கப்பட்ட பா.ஜ.க. பிரமுகர்கள் மீது பலரும் தந்த மோசடி புகாரை விசாரிக்காமல் இருக்க பல லட்ச ரூபாய் பணம் வாங்கியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் அங்கிருந்து இராணிப்பேட்டைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். தற்போது ஹெலிகாப்டர் சகோதரர்கள் கைது செய்யப்பட்டபோது தந்த வாக்குமூலத்தில் இரண்டு முறை லஞ்சம் தந்ததாக அவர்கள் கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதனாலேயே உயரதிகாரிகள் அவரை இடமாற்றம் செய்யப் பரிந்துரை செய்து தற்போது பட்டாலியனுக்கு மாற்றப்பட்டுள்ளார்" என்கிறார்கள் விவரம் அறிந்தோர்.