நடிகர் கமல்ஹாசனின் அறுபது ஆண்டு கால சினிமா பங்களிப்பை கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக 'கமல் 60’ எனும் பிரம்மாண்டமான நிகழ்ச்சி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜாவின் கச்சேரி நடந்தது.
கமல்ஹாசன் மேடையிலிருந்து கீழே இறங்கி பார்வையாளர்கள் இடத்தில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது இளையராஜா, ”நிகழ்ச்சியை கீழே உட்கார்ந்து பார்வையாளராக கச்சேரியை கேட்டுவிட்டுப் போகலாம் என்று வந்தீர்களா? மேல வாங்க... என்னுடன் சேர்ந்து பாட வாங்க...” என கமல்ஹாசனை கூப்பிட்டார்.
இதனால் மீண்டும் மேடைக்கு கமல் நடந்து வந்தார். அப்பொழுது விழாக் குழுவினரால் பின்னணி பிஜிஎம் இசை போடப்பட்டது. ஆனால் இளையராஜா அந்தப் பின்னணி இசையை நிறுத்த சொன்னார். “ஃபில்லிங்குக்காக (நிரப்புவதற்காக) இசையை போடாதீர்கள். இதற்கு முன்பே நீங்கள் போட்ட புன்னகை மன்னன் தீம் மியூசிக்கை நாங்கள் லைவாக வாசிக்கலாம் என்று ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால் நீங்கள் அந்தப் புன்னகை மன்னன் தீம் மியூசிக்கை போட்டதால் எங்களால் அதை வாசிக்க முடியாமல் கெட்டுப்போய் விட்டது” என்று சற்று கோபமாக சொன்னார். அப்போது கமலும் மேடையில் இருந்தார்.
இளையராஜாவின் கோபம் புகழ்பெற்றதாகிவிட்டது. நேற்றைய நிகழ்விலும் கோபப்பட்டாலும் பின்னர் கமல்ஹாசனுடன் மிக மகிழ்ச்சியாக, கிண்டல் செய்து, ஜாலியாக ரசிகர்களை மகிழ்வித்தார்.