சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் அ.தி.மு.க.வின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இன்று (11/07/2022) காலை 09.15 மணிக்கு செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்றது.
இதில், கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். கட்சியின் கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் விரோதமாக செயல்பட்டதாக ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகரன் ஆகிய நான்கு பேரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கியது பொதுக்குழு. கட்சியின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற பொதுக்குழுவிற்கு எதிராக ஓபிஎஸ் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் 'இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சட்டவிதிகள் மீறப்பட்டுள்ளது. இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டதை ஏற்கக் கூடாது, அதற்கு அங்கீகாரமும் தரக்கூடாது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற பொதுக்குழுவின் முடிவுகளை இபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள நிலையில் ஓபிஎஸ் இதற்கு எதிராக இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.