இந்தியாவில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணி இன்று முதல் நடைமுறைக்குவந்துள்ளது. தமிழ்நாட்டில், இன்று காலை சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் சிறார்களுக்கான தடுப்பூசி போடும் பணி துவக்கப்பட்டது. அந்தவகையில், திருச்சியில் நடைபெற்றுவரும் சிறார்களுக்கான கரோனா தடுப்பூசி திட்டத்தை திருச்சி புத்தூர் பிஷப் மேல்நிலைப் பள்ளியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “15 வயது முதல் 18 வயது வரையிலான 1,26,400 மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி போடுவதற்கு முன்பதிவு தேவையில்லை. பள்ளிகளிலேயே தடுப்பூசி போடப்படுகிறது. ஒமிக்ரான் தொற்றுக்கு கரோனா வைரஸ் தொற்றுக்கு ஏற்படுத்தப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். தியேட்டர்கள், மால்களில் 50% பொதுமக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். புத்தாண்டு என்ற காரணத்தால் கோவில் வழிபாடுகளுக்கு தடை விதிக்கப்படவில்லை. பொதுமக்கள் வீட்டிலிருந்து வரும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.
ஒமிக்ரான் வைரஸிற்க்கு ஆக்ஸிஜன் தேவைப்படாது. இருப்பினும் ஆக்ஸிஜன் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. எத்தனை நோயாளிகள் வந்தாலும் சிகிச்சை அளிக்க அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சத்திரம் பேருந்து நிலையம் நாளை முதல் பயன்பாட்டிற்கு வரும். ரூ. 90 கோடி மதிப்பில் காவிரியில் புதிய பாலம் கட்ட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இரண்டாவது தலைநகரம் என்று சொல்லாமலேயே திருச்சிக்கு அடிப்படை வசதிகள் தர அரசு தயாராகிவிட்டது. மணப்பாறையில் சிப்காட் வளாகத்தில் புதிய தொழிற்சாலை அமைத்து தர தொழில்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன். அவரும் செய்து தருகிறேன் என்றார். மேலும் இராணுவத் தளவாடங்கள் எல்லாம் திருச்சிக்கு கொண்டு வருகிறேன் என்று கூறியுள்ளார். அரைவட்ட சாலை முழுமையடைந்ததும் திருச்சிக்கு புது வியாபாரம் கிடைக்கும்.
இரண்டாவது தலைநகரம் என்று சொல்லி அரசு அலுவலகங்கள் வருவதற்கு தாமதம் ஆகலாமே தவிர அடிப்படை வசதிகள் கொண்டுவரப்படும். பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் ஒரு வருடத்தில் முடிந்து பேருந்து நிலையம் செயல்பட ஆரம்பிக்கும். இதன் மூலம் 20,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். விவசாயிகளுக்குப் பெரிய அளவில் லாபம் கிடைக்கும். அடுத்த வருடம் மணப்பாறைக்கும், துறையூருக்கும் கல்லூரிகள் அமைக்க முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.