கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 58 உயிரிழந்த நிலையில் தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யும் நபர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தாளவாடி மலைப்பகுதி கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ளதால் கர்நாடக மது குறைந்த விலைக்கு கிடைப்பதாலும் சிலர் கர்நாடக மது பாக்கெட்களை வாங்கி சட்டவிரோதமாக விற்பனை செய்து வருவது தாளவாடி மலைப்பகுதியில் தொடர்கதையாகி வருகிறது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவத்தைத் தொடர்ந்து தாளவாடி மலை கிராமம் முழுவதும் போலீசார் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் பல்வேறு இடங்களில் கர்நாடக மாநில மதுவை வாங்கி விற்பனை செய்தவர்களை தாளவாடி போலீசார் கைது செய்தனர். இதில் பனக்கள்ளி கிராமத்தை சேர்ந்த மாதேஷ், தொட்டகாஜனூர் ஆலம்மா, மனோகரன், சிக்கள்ளி சோட்டா பாய், சிமிட்டஹள்ளி கரிமல்லு, கல்மண்டிபுரம் ராஜபாஜி, திகனாரை சித்தராஜ் என 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கர்நாடகா மது பாக்கெட் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் மீது நிறைய வழக்குகள் நிலுவையில் உள்ளது. கர்நாடக மது விற்பனை செய்வதும், போலீசார் அவர்களை கைது செய்வதும் அபராதம் கட்டிவிட்டு மீண்டும் வந்து கர்நாடக மது விற்பனை செய்வதும் தொடர்கதையாகி வருகிறது. எனவே மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தொடர் மது விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாளவாடி மலை கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.