திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் செய்யாறு ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (70). நெசவுத்தொழில் செய்து வந்த வெங்கடேசன், வயது மூப்பின் காரணமாகத் தறி ஓட்ட இயலாததால், மொத்த விலையில் ஊதுபத்தி வாங்கி சில்லறை வியாபாரமாக கிராமங்களில் சென்று விற்பனை செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
இந்த நிலையில், வெங்கடேசன் கடந்த 1999 ஆம் ஆண்டு திருவத்திபுரம் ஊரைச் சேர்ந்த மேனகா என்பவரிடம் உரிமை மாற்று ஆவணமாக ரோட்டரி வழக்கறிஞர் மூலம் இடம் ஒன்றை வாங்கியிருந்தார். அந்த இடத்தை ஒட்டி செய்யாறு வட்டாட்சியர் மூலமாக இலவச வீட்டு மனை பட்டா ஒன்றும் பெற்றிருந்தார். இவை இரண்டும் முன்னும் பின்னும் இணைந்த ஒரே காலி மனையாக இருந்தது. அதில் கூரை வீடு கட்டி வசித்து வந்துள்ளார் வெங்கடேசன்.
தற்போது 70 வயது ஆன காரணத்தினால் வெங்கடேசன் அந்த இடத்தை தன்னுடைய மகன் பாலமுருகன் பெயரில் எழுதி வைக்க நினைத்து செய்யாறு சார் பதிவாளர் அலுவலகம் சென்று சிலரிடம் விசாரித்துள்ளார். அப்போது அவர்கள், 1999 ஆம் ஆண்டு மேனகா என்பவரிடம் உரிமை மாற்று ஆவணமாக பெற்ற பட்டாவின் பெயரை மாற்றம் செய்ய வேண்டும் அதன் பிறகு, மகன் பெயருக்கு நேரடியாக கிரையம் செய்தால் மட்டுமே சொத்தை மாற்ற முடியும் என்று சொல்லியுள்ளனர்.
அதனால், பட்டா மாற்றம் விஷயமாக கடந்த ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி, மக்களுடன் முதல்வர் முகாமில் வெங்கடேசன் மனு ஒன்றை அளித்துள்ளார். ஆனால், அந்த மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, வெங்கடேசன் நேற்று (11-03-24) திருவத்திபுரம் நகராட்சியில் உள்ள சர்வேயர் பிரிவில் சர்வேயர் கன்னிவேலை சந்தித்து பட்டா மாற்றம் சம்பந்தமாக பேசியுள்ளார். அப்போது கன்னிவேல், லஞ்சமாக 40 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்று கூறியுள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த வெங்கடேசன், ‘எனக்கு 70 வயது ஆகிறது என்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது. மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் உள்ளேன்’ என்பதை கூறியுள்ளார். அதற்கு கன்னிவேல், ‘கடைசியா சொல்றேன், 20 ஆயிரம் கொடுத்தால் தான் என்னால் பட்டா மாற்றம் செய்ய முடியும்’ என்று சொல்லி வெங்கடேசனை அனுப்பிவிட்டார்.
இதில் மனமுடைந்து போன வெங்கடேசன், திருவண்ணாமலை விஜிலன்ஸ் டி.எஸ்.பி வேல்முருகனை அணுகி இன்று (12-03-24) காலை புகார் மனு கொடுத்தார், இதன் அடிப்படையில் டி.எஸ்.பி வேல்முருகன் இன்று காலை ரசாயன பவுடர் தடவிய 20 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வெங்கடேசனிடம் தந்து அனுப்பியுள்ளார். ரசாயன பவுடர் தடவிய பணத்தை வெங்கடேசன், சர்வேயர் கன்னிவேலிடம் கொடுத்தபோது, அவர் அங்கிருந்த கணினி உதவியாளர் மாதவனிடம் கொடுக்க சொல்ல இவரும் தந்துள்ளார். அவர் பணம் பெற்றதும் உள்ளே நுழைந்த விஜிலன்ஸ் குழுவினர் கையும் களவுமாகப் பிடித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சி திருவத்திபுரம் நகராட்சி மற்றும் நகரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.