அண்மையில் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவனின் மீது சக பள்ளி மாணவர்கள் சாதிய மோதல் காரணமாக மாணவனின் வீட்டுக்கே சென்று அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தியிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதே போல் புதுக்கோட்டையில் சாதி குறித்து பேசி, சக மாணவர்கள் தாக்குதல் நடத்தியதால் பள்ளி மாணவன் மனமுடைந்த தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக இந்த சம்பவத்தில் மாணவன் காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட நிலையில் தற்பொழுது போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கொப்பம்பட்டியை சேர்ந்த மாணவர் ஒருவர் கீரனூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த 2 ஆம் தேதி மாணவன் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதலில் காதல் தோல்வியால் மாணவன் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்திருந்தனர். ஆனால் இதனை முற்றிலும் மறுத்த மாணவனின் பெற்றோர், பள்ளியில் சக மாணவர்கள் சிலர் சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாலும், தாக்கியதாலும் தான், தன் மகன் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என பெற்றோர் கோரிக்கை வைத்ததால் இந்த வழக்கு வன்கொடுமை தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
சாதிய மோதல் காரணமாக புதுக்கோட்டையில் பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்டதாக வெளியான தகவல் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.