சென்னையில் நீட் தேர்வில் தோல்வியடைந்த பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை குரோம்பேட்டை அடுத்து இருக்கக்கூடிய குறிஞ்சி நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் செல்வ சேகர். இவரது மகன் ஜெகதீஸ்வரன் (19). கடந்த 2021 ஆம் ஆண்டு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் மூலம் 12ஆம் வகுப்பு முடித்த இவர் 'ஏ' கிரேட் கேட்டகிரியில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். அதன் பிறகு மருத்துவம் படிப்பதற்காக நீட் தேர்வுக்கு முறையாக பயிற்சி எடுத்து வந்தார். தனியார் நீட் பயிற்சி மையத்தில் பயிற்சி மேற்கொண்ட நிலையில் முதல் தேர்வைச் சந்தித்தார். முதல் முறை தேர்ச்சி பெறவில்லை. அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக பயிற்சி பெற்று இரண்டாவது முறையும் நீட் தேர்வு எழுதி இருக்கிறார். அதிலும் குறைவான மதிப்பெண்களை பெற்றிருக்கிறார். தேர்வில் தொடர் தோல்வி அடைந்ததில் இருந்து யாரிடமும் பேசாமல் இருந்ததாக மாணவனின் பெற்றோர்களும் உறவினர்களும்தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் மூன்றாவது முறை முயற்சி செய்யலாம் என அண்ணா நகரில் இருக்கக்கூடிய தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்திற்கு அழைத்துச் சென்ற தந்தை செல்வ சேகர், விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்துவிட்டு முன்பணமும் செலுத்தி இருக்கிறார். அவரை பயிற்சி மையத்திற்கு மீண்டும் அழைத்துச் செல்ல இருந்த நிலையில் மாணவன் ஜெகதீஸ்வரன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீட்டில் வேலை செய்யும் பெண் ஒருவர் பார்த்து பெற்றோர்களிடம் கூறிய நிலையில் உடல் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.