Skip to main content

 கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை சம்பவம்; பெண் பள்ளி முதல்வர் கைது!

Published on 03/09/2024 | Edited on 03/09/2024
school principal arrested on Krishnagiri incident

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை போலியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய மாணவர் படையின் (என்.சி.சி.) பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் 17 மாணவிகள் கலந்து கொண்டனர். இத்தகைய சூழலில் கடந்த மாதம் 9 ஆம் தேதி கலையரங்கில் வழக்கம்போல் உறங்கிக் கொண்டிருந்த 12 வயது சிறுமி ஒருவரை, தேசிய மாணவர் படையின் பயிற்றுநர் என்று கூறிய காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த சிவராமன் (வயது 32) சிறுமியை அங்கிருந்து அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். பயிற்சி முகாமில் இருந்த மேலும் 13 மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்த நிலையில், இது தொடர்பாக முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன், பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த வழக்கை விசாரிப்பதற்காக சிறப்பு புலனாய்வு குழு மற்றும் சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையிலான பல்நோக்கு விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்த விசாரணைக் குழு, கடந்த 10 நாட்களாக கிருஷ்ணகிரியில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 

இதற்கிடையில், சிவராமன் மீது மேலும் ஒரு போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் பள்ளியில் சிவராமனும், அவரின் பயிற்சியாளர்கள் குழுவும் சேர்ந்து இதே போன்று போலி என்.சி.சி முகாம் நடத்தியுள்ளனர். அந்த முகாமில் தங்கியிருந்த 9ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. அந்த குற்றச்சாட்டின் பேரில், கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தார்கள். இந்த வழக்கில், முதல் குற்றவாளியாக சிவராமனும், இரண்டாவது குற்றவாளியாக கமல் என்பவரும் கைது செய்யப்பட்டனர். 

இதில் முக்கிய குற்றவாளியாக இருந்த சிவராமன், சிவராமன் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதேசமயம் சிவராமனின் தந்தை அசோக்குமாரும் மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக அந்த பள்ளியின் பெண் முதல்வர் வினோதினியை போலீசார் கைது செய்துள்ளனர். பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட இரு வழக்கிலும் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சார்ந்த செய்திகள்