சேலத்தில் அரசு பெண்கள் பள்ளி மாணவி ஒருவர் பள்ளியின் உதவி தலைமையாசிரியால் பள்ளிக்கூட ஆய்வகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட மாணவி கர்ப்பமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தில் சேலம்-கோவை நெடுஞ்சாலையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைபள்ளியில் உதவி தலைமையாசிரியராக பணிபுரிந்து வருபவர் பாலாஜி. வேதியியல் ஆசிரியரான இவன் அடிக்கடி தன் வகுப்பில் படிக்கும் மாணவிகளை வேதியியல் ஆய்வகத்திற்கு அழைத்து சென்றுள்ளான். இந்நிலையில் அந்த பள்ளியில் கடந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மாணவி ஒருவர் கார்பம் தரித்ததாக கூறப்படுகிறது.
பள்ளியின் வேதியியல் ஆய்வுகூடத்தில் ஆசிரியர் பாலாஜி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், தொடர்ந்து மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் அந்த மாணவி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். மாணவியின் பெற்றோர்கள் இதுதொடர்பாக கொண்டலாம்பட்டி போலீசில் புகாரளிக்க விசாரணை தொடங்கியது. அந்த பள்ளியின் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பெண் காவல் ஆய்வாளர் புஷ்பராணி என்பவர் அந்த சிறுமியின் குடும்பத்திற்கு 5 லட்சம் பெற்றுத்தருவதாகவும், இந்த புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டு கருவை கலைக்கும்படி மிரட்டல் விடுத்துள்ளார்.
அந்த மாணவி ஏழை குடும்பத்தை சார்ந்தவர் என்பதால் பெண் போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து அந்த ஆசிரியர் மீதான புகாரை வாபஸ் பெற்றுள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட மாணவி தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் அந்த காமக்கொடூர ஆசிரியரை காப்பாற்ற மாணவிக்கு மிரட்டல் விட்ட பெண் காவல் ஆய்வாளர் குறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவகரிடம் புகார் கொடுக்கப்பட்டது.இந்த தகவல் உயர் காவல் அதிகாரிகள் கவனத்திற்கு போக அவர்களின் உத்தரவின்பேரில் கொண்டலாம்பட்டி காவல்துறையினர் அந்த பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த ஆசிரியர் தலைமறைவானது தெரிய வந்தது. தற்போது மாணவியை மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பிய காவல்துறையினர் அந்த காமக்கொடூர ஆசிரியர் மீது பாலியல் பலாத்காரம், போக்ஸோ உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடிவருகின்றனர்.
இப்படி மாணவ மாணவிகளுக்கு கல்வி போதிக்கும் ஆசிரியரே வேலியே பயிரை மேய்வது போல் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கர்ப்பம் வரை சென்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.