Skip to main content

பள்ளிக் கட்டணம் செலுத்தும்படி பெற்றோரை நிர்ப்பந்திக்கக் கூடாது! -தனியார் பள்ளிகளின் கோரிக்கையை பரிசீலிக்க அரசுக்கு உத்தரவு!

Published on 30/06/2020 | Edited on 01/07/2020
hc

 

தனியார் பள்ளிகள் கட்டணம் செலுத்தும்படி பெற்றோரை நிர்ப்பந்திக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், அதேசமயம்,  பெற்றோர் தாமாக விருப்பப்பட்டு கட்டணம் செலுத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை எனவும்  தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் சார்பில்,  அதன் மாநில பொதுச் செயலாளர் கே.பழனியப்பன் தாக்கல் செய்த வழக்கில், “தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என்ற தமிழக அரசின் அரசாணை  சட்டவிரோதமானது. பள்ளி மாணவர்களிடம் கல்விக் கட்டணம் வசூலித்தால்தான், பள்ளிகளில் பணியாற்றும் ஆசியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியும்.  கடந்த மூன்று மாதங்களாக பள்ளிகள் இயங்காவிட்டாலும், அங்கு பணியாற்றும் அனைவருக்கும் தனியார் பள்ளிகள் சம்பளம் வழங்கி வருகின்றன.  தற்போது,  கல்விக் கட்டணம் வசூலிக்க அனுமதித்தால்தான், ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் சம்பளம் கொடுக்க முடியும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு,  கடந்த முறை நீதிபதி ஆர்.மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, “அரசு உதவி பெறாத பள்ளிகள்,  கட்டணத்தை வசூலிக்காமல் எப்படி சம்பளத்தை வழங்க முடியும், ஆன்லைன் வகுப்புகளை பெரும்பாலான பள்ளிகள் தொடங்கிவிட்டு, வகுப்புகளை நடத்த ஆசிரியர்களை கல்வி நிறுவனங்கள் நிர்பந்திக்கும் நிலையில்,  எப்படி சம்பளம் வழங்காமல் இருக்க முடியும்” என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் ஆஜராகி, தனியார் பள்ளிகள் கட்டணம் செலுத்தும்படி பெற்றோரை நிர்ப்பந்திக்கக்கூடாது என்று  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  அதேசமயம்,  பெற்றோர், தாமாக விருப்பப்பட்டு கட்டணம் செலுத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை.  கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத இடங்களை 248 கோடியே  76 லட்சம் ரூபாய்,  ஏற்கனவே தனியார் பள்ளிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளதால், அந்தத் தொகையைப் பயன்படுத்தி,  மூன்று நான்கு மாதங்களுக்கு ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்கலாம் என விளக்கம் அளித்தார். இதற்கு, தமிழகம் முமுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லுரிகள் சார்பாக பதில் அளிக்க அவகாசம் வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல் விஜயானந்த் கோரிக்கை வைத்தார்.

இதைக் கேட்ட நீதிபதி, தவணை முறையில் கட்டணம் செலுத்துவது தொடர்பாக உயர் நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளதாகவும்,  தமிழக அரசு தெரிவித்ததையடுத்து,  இதுதொடர்பாக, திட்டம் வகுக்கக்கோரி தனியார் பள்ளிகள் மற்றும்  கல்லூரிகள்,  அரசுக்கு மனு அளிக்கலாம் என மனுதாரர் தரப்புக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.

தனியார் பள்ளிகளின் கோரிக்கைகளைப் பரிசீலித்து, விரைந்து திட்டத்தை வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு,  வழக்கு விசாரணையை ஜூலை 6-ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்