
நெல்லையில் பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு மீட்பு படையினர் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நெல்லையில் பொருட்காட்சித் திடல் அருகே எஸ்.என். ஹைரோடு பகுதியில் உள்ள டவுன் சாஃப்டர் தனியார் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறை சுவர் இடிந்துவிழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 8ஆம் வகுப்பு பயின்றுவந்த இரண்டு மாணவர்கள் உயிரிழந்த நிலையில், தற்போது இன்னொரு மாணவரும் உயிரிழந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. படுகாயமடைந்த மாணவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளி மீதிருந்த கோபம் காரணமாகச் சிலர் பள்ளி மீது கற்கள் வீசியதாக ஒரு புகாரும் இருந்துள்ளது.

இந்நிலையில், இந்த விபத்து சம்பவத்திற்குத் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். ''நெல்லையில் தனியார் பள்ளி கட்டடம் இடிந்து இரண்டு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் கேட்டு அதிர்ச்சியடைந்தேன்” என அவர் தெரிவித்துள்ளார்.