
கடந்த 19ஆம் தேதி தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பான செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. பள்ளி நிர்வாகம் மாணவியை மதம் மாறும்படி கட்டாயப்படுத்தியதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக மாணவி தற்கொலை செய்துகொண்டார் என சிறுமியின் பெற்றோர் புகார் அளித்திருந்தனர். பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மாணவி பேசிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அந்த வீடியோ எடுக்கப்பட்ட மொபைல் ஃபோன் நேற்று காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள அந்த தனியார் பள்ளி குழுமத்தின் நிர்வாக சபை தலைவி பாத்திமா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், 'மாணவியின் இழப்பு பள்ளிக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு. அந்த மாணவி விடுமுறையில் கூட வீட்டிற்கு செல்ல விருப்பமில்லாமல் தங்களோடு தங்கியிருந்தார். விடுதி காப்பாளர் மீது மாணவி குற்றம்சாட்டியதாக தெரியவருகிறது. எனவே இதுதொடர்பான சட்ட விசாரணைக்குப் பள்ளி நிர்வாகம் எப்போதும் துணை நிற்கும். இந்த விவகாரத்தை சில பிரிவினர் அரசியலுக்காக கையில் எடுக்கின்றனர். பொய்களை விதைப்பதும், கலங்கம் விதைப்பதும் மிகவும் வருத்தம் அளிக்கிறது. மதங்களைக் கடந்து மனித மாண்பின் அடிப்படையில் செயல்படும் தங்களைக் கொச்சைப்படுத்துவது மிகவும் வருத்தம் அளிக்கிறது' என குறிப்பிடப்பட்டுள்ளது.