வாக்கு எண்ணிக்கை குளறுபடியால் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகும் வெற்றிச் சான்றிதழ் வழங்காததால் வாக்கு எண்ணும் மையம் முன்பு திடீர் போராட்டத்தில் மக்கள் குதித்தனர். திண்டுக்கல் யூனியனுக்கு உட்பட்ட பள்ளபட்டி பஞ்சாயத்து தலைவருக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
இதில் தி.மு.க. வர்த்தக அணி ஒன்றிய செயலாளர் பரமன் சுயேட்சை வேட்பாளராக மண்வெட்டி சின்னத்தில் போட்டியிட்டார். அதுபோல் கேணி சின்னத்தில் காளிதாஸ் போட்டியிட்டார். இப்படி பத்து வேட்பாளர்கள் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டி போட்டனர். இந்த நிலையில் தான் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பள்ளபட்டி பஞ்சாயத்து தலைவரின் வாக்கு எண்ணிக்கை திண்டுக்கல்லில் உள்ள எம்.வி.எம். கலைக்கல்லூரியில் நடைபெற்றது.
இதில் இரவு பத்து மணியளவில் பரமனை எதிர்த்து போட்டியிட்ட காளிதாஸ் வெற்றி பெற்றதாக வாக்கு எண்ணிக்கையில் உள்ள குளறுபடியின் அடிப்படையில் தகவல் வந்ததின் பேரில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர்கள் பெரும்பாலானோர் வீடு திரும்பிவிட்டனர். ஆனால் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள அரசுப் பணியாளர்கள் பள்ளபட்டி பஞ்சாயத்து தலைவருக்கான மொத்த வாக்கு எண்ணிக்கை விபரங்களை தேர்தல் அதிகாரியான பிடிஓ மணிகண்டனிடம் கொடுத்து சரிபார்த்தபோது மண்வெட்டி சின்னத்தில் போட்டியிட்ட பரமன் 54 ஓட்டுக்கள் கூடுதல் வாங்கியிருப்பதாக தெரிய வந்தது.
ஆனால் கிணறு சின்னத்தில் போட்டியிட்ட காளிதாசும் அவருடைய ஆதரவாளர்களும் நாங்கள்தான் வெற்றிபெற்றோம் என்று தேர்தல் அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் அதிகாரிகளோ அதெல்லாம் இல்லை எங்களுடைய வாக்கு எண்ணிக்கையின்படி மண்வெட்டி சின்னத்தில் போட்டியிட்ட பரமன் தான் வெற்றி பெற்று இருக்கிறார் என்று கூறிவிட்டார். அப்படியிருந்தும் தொடர்ந்து வாக்கு மையத்திலேயே எதிர்தரப்பினர் விடிய விடிய இருந்தனர்.
அதிகாலையில் காளிதாசின் ஆதரவாளர்கள் கல்லூரி முன் திரண்டு வந்து காளிதாஸ் தான் வெற்றி பெற்றார் சான்றிதழ் வழங்க வேண்டும் என குரல் கொடுத்தனர். அதைக்கண்டு போலீசார் தேர்தல் விதிமுறையின்படி யார் வெற்றி பெற்றாரோ அவர்களைத்தான் தேர்தல் அதிகாரி அறிவிப்பார். அப்படி இருக்கும்போது நீங்கள் தொடர்ந்து கல்லூரி முன் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டால் போலீசார் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று கூறி அந்த மக்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இந்த விசயம் மண்வெட்டி சின்னத்தில் போட்டியிட்ட பரமனுக்கும் அவருடைய ஆதரவாளர்க்கும் தெரியவே உடனே கல்லூரிக்கு வந்து தேர்தல் அதிகாரியிடம் மறுவாக்கு எண்ண சொல்லி வலியுறுத்தினார்கள். அதைத்தொடர்ந்து தேர்தல் அதிகாரி பிடிஓ மணிவண்ணன் தலைமையில் மீண்டும் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் மண்வெட்டி சின்னத்தில் போட்டியிட்ட பரமன் 1805 ஓட்டுக்களும், அவரை எதிர்த்து கேணிச் சின்னத்தில் போட்டியிட்ட காளிதாஸ் 1751 ஓட்டுக்கள் வாங்கியிருக்கிறார்.
இதில் கூடுதலாக 54 ஓட்டுக்கள் மண்வெட்டி சின்னத்தில் போட்டியிட்ட பரமன் வாங்கியதின் மூலம் வெற்றி பெற்றதாக கூறி தேர்தல் அதிகாரியான பிடிஓ மணிவண்ணன் சான்றிதழை வழங்கினார். ஆனால் வாக்கு எண்ணிக்கையின்போது பூத் ஏஜெண்டுகளின் குளறுபடியால் வெற்றி பெற்றவர் யார் என்று உடனடியாக தெரிந்து கொள்ள முடியவில்லை. அதனால்தான் ஒருநாள் இரவு முழுவதும் வெற்றி பெற்றவருக்கான சான்றிதழ் வழங்குவதிலும் காலதாமதம் ஏற்பட்டது.
இந்த மறுவாக்கு எண்ணிக்கையின் போது திண்டுக்கல் யூனியன் தேர்தல் அதிகாரியான ஆர்டிஓ உஷா, மேனேஜர்சரவணன், டவுன்டிஎஸ்பி மணிமாறன் உள்பட சில அதிகாரிகளும், போலீசாரும் உடன் இருந்தனர். அதன்பின் பள்ளபட்டி பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பரமன் முன்னாள் அமைச்சரும், கழக துணைப் பொதுச் செயலாளருமான ஐ.பெரியசாமியையும், கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்குமாரையும் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்!