அதிமுக பொன்விழா ஆண்டை முன்னிட்டு தி.நகரில் உள்ள எம்ஜிஆர் ஜானகி மாளிகையில் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்விழாவில் கலந்துகொண்ட சசிகலா கட்சிக் கொடி ஏற்றி வைத்தார். கட்சிக் கொடியை ஏற்றிவிட்டு கல்வெட்டு ஒன்றையும் திறந்து வைத்தார் சசிகலா. அந்த கல்வெட்டில் 'அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா' என்று பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்பிறகு அவர் எம்.ஜி.ஆர் வாழ்ந்த ராமாபுரம் தோட்டத்திற்குச் சென்றார்.
அப்பொழுது பேசிய சசிகலா, ''அதிமுகவை காலம் முழுக்க காப்பாற்ற வேண்டியது நம் அனைவரின் பொறுப்பு. மக்களுக்காக நாம் இணைந்து நிற்க வேண்டிய நேரம் இது. அதிமுக ஆட்சியை மீண்டும் கொண்டுவர வேண்டும். நாம் ஒன்றாக வேண்டும். அதிமுக வென்றாக வேண்டும். நமக்கு தேவை ஒற்றுமை தான். நீரடித்து நீர் விலகாது. என்னால் அதிமுகவுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்றுதான் இவ்வளவு நாள் அமைதியாக இருந்தேன். நெருக்கடிகள் என்னை சூழ்ந்த போதும் கூட அதிமுகவை ஆட்சியில் அமர்த்திவிட்டுத்தான் சென்றேன்'' எனக் கூறியுள்ளார்.